×

ஏழை மாணவர்களின் கனவு நிறைவேறாமல் போகும்: கல்யாணந்தி, தலைவர், கல்வி ஆலோசகர், கே.கே.எஸ் அகாடமி நிறுவனர்

10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த பின்னர் மாணவர்கள் அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்ய வேண்டும், எந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் அடைவார்கள். குறிப்பாக, நகர்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்வதில் கொஞ்சம் விழிப்புணர்வு இருக்கும். நடுத்தரவர்க்கத்தினருக்கு ஏதாவது செய்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கும். அடித்தட்டு மக்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்துவிடுவார்கள். ஆனால், கல்வி ரீதியாக வழிகாட்டுதல் அவர்களுக்கு இருக்காது.

இதனால், கிராமப்புறத்தில் உள்ள 30 முதல் 40 சதவீத மாணவர்கள் மட்டுமே மேல்படிப்பிற்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி படிக்க வருபவர்களும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் சேர வருபவர்களாக இருக்கிறார்கள். இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து உயர்த்தும் போது இட ஒதுக்கீடு என்பது அடிபட்டுப்போய்விடும். 2017ல் உயர்கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்துவதற்காக ஐ.ஓ.இ என்ற திட்டத்தை யுஜிசி கொண்டு வருகிறார்கள். இதன்படி, 20 கல்வி நிறுவனங்களை இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரலாம் என்று 2019ல் 16 பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் கொடுத்தார்கள்.

இதனால், கல்வி ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தன்னிச்சையாகவே செயல்படுவார்கள். கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வது முதல் தேர்வு நடத்துவது வரை அனைத்தையும் தன்னிச்சையாகவே முடிவு செய்வார்கள். சிறப்பு அந்தஸ்து கொடுத்து நாங்கள் உலகத்தரத்திற்கு கல்வியை உயர்த்துகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், இதில் உள்ள பலனை யார் அனுபவிக்க போகிறார்கள் என்பது தான் கேள்விக்குறி. குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. பலனும் கிடைக்காது. உயர்கல்வி அந்தஸ்தை கொடுக்கும் போது கல்விக்கட்டணம் என்பது உயரும்.

30 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி படித்த மாணவர்கள் இனி ₹1 லட்சம் ரூபாய் வரையில் செலுத்தி படிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள். இதனால், முதல்தலைமுறை மாணவர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகும். அண்ணாப்பல்கலைக்கழகம் பல மாணவர்களின் கனவாகவே உள்ளது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு படிக்க கதவை திறந்துவிட்டதே இந்த அண்ணாப்பல்கலைக்கழகம் தான். மேற்படிப்பு படிக்க ஆர்வம் ஏற்படுத்திய பல்கலைக்கழகமாகவே இது பார்க்கப்படுகிறது. தற்போது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான பட்டியலில் உள்ளது.

இதில், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் எங்களுக்கு இந்த அந்தஸ்து தேவையில்லை என கூறிவிட்டது. மத்திய அரசு தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் வந்துவிட்டது என்றால் அடுத்தது சென்னை பல்கலைக்கழகமே அவர்களின் இலக்காக இருக்கும். இவ்வளவு நாள் வாய்ப்புகளை கொடுத்துவந்த அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் கீழ் சென்றது என்றால் கட்டண நிர்ணயம் முதல் அனைத்துமே கைநழுவி போய்விடும். ஏழை மாணவர்களின் கனவு நிறைவேறாமலேயே போகும். கட்டணம் அதிகரிக்கும் போது அடித்தட்டு மக்கள் கல்வி கற்கவே வரமாட்டார்கள். இதேபோல், மற்ற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் இங்கு வந்து படிக்க வாய்ப்பை ஏற்படுத்தும்.

மாநில அரசின் நிதி தேவையில்லை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறுகிறது. குறிப்பாக, ₹1000 கோடி நிதியை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்றால் அது மாணவர்களிடம் இருந்து தான் வசூலிக்கப்படும். கடன் வாங்கி படிக்கும் மாணவர்கள் ஒரு கட்டத்தில் அதிக கட்டணத்தை கட்ட முடியாத சூழல் உருவாகும். மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் அதிகமாகும். வெற்றிபெற வேண்டும் என்று கிராமப்புறத்தில் இருந்து வரும் அடித்தட்டு வகுப்பை சார்ந்த மாணவர்களின் கனவுகளும், கதவுகளும் மூடப்படும். கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில்  பல்கலைக்கழகத்தில் சேர வருபவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில், அண்ணா  பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து உயர்த்தும் போது  இடஒதுக்கீடு என்பது அடிபட்டுப்போய்விடும்.

Tags : President ,Founder ,Educational Adviser ,KKS Academy , The dream of poor students will not come true: Kalyanandi, Chairman, Educational Adviser, Founder of KKS Academy
× RELATED புதுவை எம்பி தேர்தலில் படுதோல்வி;...