×

தீபாவளியையொட்டி வட மாநில ஆர்டர் இல்லாததால் சேலம் வெள்ளி வியாபாரிகள் கலக்கம்: தொழில் கடும் பாதிப்பு என்று வேதனை

சேலம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வட மாநிலங்களில் இருந்து ஆர்டர் இன்னும் வராததால் சேலம் வெள்ளி வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர். பஸ், ரயில் போக்குவரத்து இல்லாதது பெரிய இழப்பு என்று அவர்கள் கூறியுள்ளனர். தமிழகத்தில் சேலத்தில் தான் வெள்ளிப்பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. சேலத்தில் செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, பள்ளப்பட்டி, சிவதாபுரம், பனங்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளிப்பட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கின்றனர்.இங்கு வெள்ளி கால்கொலுசு, அரைஞாண்கொடி, சந்தனகிண்ணம், குங்கும சிமிழ், டம்ளர், வெள்ளித்தட்டு உள்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப்பொருட்கள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர வட மாநிலங்களுக்கும் அதிகளவில் செல்கிறது. வட மாநிலங்களில் சேலம் வெள்ளிக்கு எப்போதும் தனி மவுசு உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது பெண்கள் புது கால்கொலுசு அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதை முன்னிட்டு வட மாநில வெள்ளி வியாபாரிகள், சேலம் வெள்ளி வியாபாரிகளிடம் ஒரு மாதத்திற்கு முன்பே வெள்ளி பொருட்கள் கேட்டு ஆர்டர் கொடுப்பார்கள். நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் இன்னும் தீபாவளி ஆர்டர் வராததால் சேலம் வெள்ளி வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

இது குறித்து சேலம் வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு 25 நாட்களுக்கு முன்பே டெல்லி, ஆக்ரா, கல்கத்தா, மும்பை, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து வெள்ளி வியாபாரிகள், தமிழக வெள்ளி வியாபாரிகளுக்கு ஆர்டர் கொடுப்பார்கள். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது 75 டன் வெள்ளி ஆர்டர் வந்தது. நடப்பாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், ஏற்கனவே இருப்பில் உள்ள வெள்ளிப்பொருட்கள் வியாபாரம் இல்லாததாலும் வட மாநில வியாபாரிகள் தீபாவளி ஆர்டர் கொடுக்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்றால் வியாபாரிகள் பஸ் மூலம் நேரடியாக வியாபாரிகள் வெள்ளிப்பொருட்களை கொடுத்துவிட்டு பணம் கொள்வார்கள். ஆக்ரா, மும்பை, கல்கத்தா என்றால் ரயிலில் தான் கொண்டு செல்ல முடியும். தற்போது மாநிலம்விட்டு மாநிலம் ரயில் போக்குவரத்து இல்லாததால் வியாபாரிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் 50 சதவீதம் வியாபாரம் இல்லாமல் போய்விட்டது. வரும் 25ம் தேதி ஆயுதபூஜை விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு பிறகு ஆர்டர் வரலாம் என்று எதிர்பார்க்கிறோம். அதுவும் வெள்ளி உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கும் அளவில் ஆர்டர் இருக்காது. சொற்ப அளவில் 10 முதல் 20 டன் ஆர்டர் தான் வரும். இதனால் வியாபாரிகள், உற்பத்தியாளர்களுக்கு எவ்வித பயனும் இருக்காது. மொத்தத்தில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வியாபாரம் எதிர்பார்த்த அளவில் இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். வட மாநில வெள்ளி வியாபாரிகள், சேலம் வெள்ளி வியாபாரிகளிடம் ஒரு மாதத்திற்கு முன்பே வெள்ளி பொருட்கள் கேட்டு ஆர்டர் கொடுப்பார்கள். நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் இன்னும் தீபாவளி ஆர்டர் வராததால் சேலம் வெள்ளி வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

* போனஸ் வழங்குவது கடினம்
‘‘தீபாவளி பண்டிகையின்போது வெள்ளி பொருட்கள் இரவு, பகலாக உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் கிடைக்கும் பணத்தைக்கொண்டுதான் பட்டறைகள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும். நடப்பாண்டு வியாபாரிகளுக்கு வருவாய் குறையும். அப்படி இருக்கும் சூழ்நிலையில் தீபாவளி போனஸ் வழங்குவது கடினமாக இருக்கும். போனஸ் இல்லை என்றால் பல்லாயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். நடப்பு மாத வியாபாரத்தை வைத்து முடிந்தவரை தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றும் வியாபாரிகள் கூறினர்.

* உள்ளூர் வியாபாரம்
நிச்சயம் கை கொடுக்கும்
சேலத்தில் உள்ள உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் உள்ளூர் வியாபாரத்தை நம்பி தான் இருக்கின்றனர். சென்னை, கோவை, திருச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு காரில் சென்று வியாபாரம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆயுதபூஜைக்கு பிறகு உள்ளூர் வியாபாரம் கை கொடுக்கும் என்று வியாபாரிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

Tags : silver traders ,Salem , Salem silver traders upset over lack of northern state order for Deepavali: Anguish that industry is severely affected
× RELATED சேலம் ஏரியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின