×

பறவைகள் வாழ்விடம் வறண்டது நெல்லை வேய்ந்தான்குளம் மழைக்கு முன் தூர்வாரப்படுமா?

நெல்லை: பறவைகள் சரணாலயமாக காட்சியளித்த வேய்ந்தான்குளம், இன்று தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. மீண்டும் ஆக்கிரமிக்கப்படும் முன்பு குளத்தை சீரமைத்து பராமரிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் அனுமதியுடன் பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பில் பல குளங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. நெல்லை மாநகர பகுதியில் 10 குளங்களை பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சீரமைத்தன. இதனால் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது கிடைத்த மழைநீர் குளங்களில் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்தது. குளக்கரை ஆக்கிரமிப்புகளும் தடுக்கப்பட்டன. சீரமைக்கப்பட்ட நீர்நிலைகளில் பறவைகளும் முகாமிட்டு ரீங்காரமிட்டன.

குறிப்பாக நெல்லை புதிய பஸ் நிலையம் அமைந்துள்ள வேய்ந்தான்குளத்தில் நெல்லை அண்ணா பல்கலைக்கழகம், நம் தாமிரபரணி, நெல்லை மாநகராட்சி நதிநீர் பராமரிப்பு குழு உள்ளிட்ட பல அமைப்புகள் கைகோர்த்து சீரமைப்பு பணியை மேற்கொண்டன. சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தை சுமார் 1 மாதத்திற்கும் மேல் பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்கள் உதவியுடன் ஆழப்படுத்தினர். சுமார் 3 முதல் 4 அடி ஆழத்திற்கு மண் அள்ளப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டது. மேலும் குளத்தின் உள்பகுதியிலும் பறவைகள் கூடு கட்டுவதற்கு வசதியாக குன்றுபோல மணல் திட்டுகள் அமைக்கப்பட்டன. குளத்தின் சில பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளும் கட்டப்பட்டன. தண்ணீர் வரும் பாதையும் சீரமைக்கப்பட்டது. குளக்கரையில் இருந்த சில ஆக்கிரமிப்புகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் போராடி அகற்றினர்.

இதன் பலனாக கடந்த பருவமழையின் போது குளம் நிரம்பி ததும்பியதால், எதிர்பார்த்தப்படி பலவகையான பறவைகளும் முகாமிட்டன. உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் வந்தன. பறவைகளின் உணவுக்காக மீன் குஞ்சுகளும் குளத்தில் விடப்பட்டன. அனைத்து வசதிகளுடன் கூடிய சரணாலயமாக வேய்ந்தான்குளம் மாறியதால், பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொறித்தன. தொடர்ந்து கடந்த ஜூனில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால், குளத்தில் கிடந்த தண்ணீர் படிப்படியாக வற்றி 2 மாதங்களுக்கு முன்பு வேய்ந்தான்குளம் வறண்டது. மேலும் ஆங்காங்கே செடி, கொடிகளும் வளரத் துவங்கியுள்ளன. இங்கு மாநகராட்சி கண்காணிப்பை மீறி அவ்வவ்போது குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இரவில் மதுப்பிரியர்கள் மற்றும் சமூக விரோத கும்பல்களின் சொர்க்கப்புரியாக வேய்ந்தான்குளம் மாறி வருகிறது.

இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதால், மழைக்கு முன்னதாக வேய்ந்தான்குளத்தை மீண்டும் சீரமைப்பது அவசியமாகும். நெல்லை மாநகராட்சி நிர்வாகம் முன் வந்து இக்குளத்தை பராமரிப்பதுடன் சுற்றிலும் வேலி அமைத்து ஆக்கிரமிப்புகளை தடுப்பதுடன் பறவைகள் சரணாலயமாக தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும். இதுகுறித்து நம் தாமிரபரணி இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லபெருமாள் கூறுகையில், வேய்ந்தான்குளம் மாநகர பகுதியில் உள்ள அழகான நிலத்தடி நீருக்கு பயன்படும் குளம் வேய்ந்தான்குளம் ஆகும்.

அதன் மொத்த பரப்பளவு 86 ஏக்கராக இருந்தது. பஸ் நிலையம் 20 ஏக்கரில் கட்டப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் உள்ளது. தற்போது குளத்தின் அளவு 50 ஏக்கர் பரப்பளவிற்கு சுருங்கிவிட்டது. இதில் மழைக் காலங்களில் தேங்கும் நீர் மூலம் சுற்றுப்பகுதியில் நிலத்தடிநீர் வற்றாமல் இருக்கும். நீண்டநாள் பராமரிக்காமல் மேடாகிப்போன இந்த குளம் கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டது. இதனால் கூந்தன்குளத்திற்கு வரும் பறவைகள் இங்கு வந்து தங்கின. தற்போது தண்ணீர் வற்றிய நிலையில் பராமரிப்பு நடைபெறவில்லை. உள்பகுதியில் பறவைகள் தங்குவதற்கு 17 ‘பிட்’ திடல் அமைத்தோம். பறவைகளுக்காக விடப்பட்ட மீன்களை சமூகவிரோதிகள் பிடித்துச் சென்றனர். தண்ணீரையும் மோட்டார் வைத்து உறிஞ்சினர். மழைநீர் குளத்திற்கு செல்லும் 2 பாதைகளிலும் மீண்டும் ஆக்கிரமிப்பு உள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும்.

உள்பகுதியிலும் சீரமைப்பது அவசியம். குளப்பகுதி முழுவதும் கரையை சுற்றி யாரும் உள்ளே செல்ல முடியாதபடி வேலி அமைக்க வேண்டும். கண்காணிப்பு காமிராக்களும் பொருத்த வேண்டும். அப்போதுதான் இரவு நேரங்களில் உள்ளே செல்லும் ஆக்கிரமிப்பாளர்களை கட்டுப்படுத்த முடியும். உள்பகுதியில் கால்நடைகளை மேய விடுவதால் உள்ளே நடப்பட்ட மரக்கன்றுகள் பல அழிந்துவிட்டன. நீர் உள்ளே செல்லும் தாழ்வான பாதையிலும் வேலி அடைப்பு அவசியம். இப்போது மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் மழைக்கு முன் இந்த குளத்தை பராமரித்தால் இது நிரந்தர பறவைகள் சரணாலயமாக மாறும், என்றார். ஒரு குளத்தை ஆக்ரமிப்பின் பிடியில் இருந்து மீட்டெடுப்பது கடினம். ஆனால் மீட்டெடுத்த குளத்தை பராமரித்து சீரமைத்து பாதுகாக்க வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் கடமையாகும்.

* நிரந்தர சரணாலயமாகும்
அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மைய மூத்த ஆராய்ச்சியாளர் மதிவாணன் கூறுகையில், வேய்ந்தான்குளத்தில் நீர் நிரம்பியதும் கடந்த ஜனவரியில் இருந்து பறவைகள் அதிகளவில் முகாமிட தொடங்கின. ஐரோப்பா நாட்டை சேர்ந்த கார்கினி எனப்படும் நீல சிறகு வாத்து 200க்கும் மேல் வந்தன. சில்லிதாரா என்ற வாத்து இனம் 100க்கும் மேல் தங்கின. புள்ளி மூக்கு தாரா, நீர்க்கோழி, பவளக்கால் உள்ளான், நாமகோழி போன்றவை கூடுகட்டி குஞ்சு பொறித்தன. இவை தவிர உள்ளான் இனப்பறவைகள், நாரையினப் பறவைகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் 40க்கும் மேற்பட்ட இனங்களில் சுமார் 2 ஆயிரம் பறவைகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்புவரை முகாமிட்டு இருந்தன. இங்கு வந்த பறவையினங்கள் குறித்து படத்துடன் விளக்க பேனரை வைத்தோம். ஏராளமானோர் வந்து பார்வையிட்டு மகிழ்ந்தனர். போக்குவரத்து இரைச்சல் மிகுந்த மாநகர பகுதியில் இந்தளவுக்கு பறவைகள் முகாமிடுவது அபூர்வமாகும். இந்த குளத்தை ஆண்டுதோறும் பராமரித்தால் அக்டோபர் முதல் மார்ச் வரை பறவையினங்கள் நிச்சயம் அதிகளவில் முகாமிடும். எதிர்காலத்தில் நிரந்தர பறவைகள் சரணாலயமாகவும், பொதுமக்களின் மினிசுற்றுலா பகுதியாகவும் மாற வாய்ப்புள்ளது, என்றார்.

* பேவர் பிளாக் அமைத்து நடைபாதை
மாநகர நதிநீர் பாதுகாப்பு குழு செயலாளர் முத்துசாமி கூறியதாவது: வேய்ந்தான்குளத்தை பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்தோம். அதன் பலன் கடந்த ஆண்டு நன்றாகவே தெரிந்தது. இந்த குளத்தை பராமரிக்கும் குழுவில் உள்ள நபர்களில் பலர் மூத்தவர்கள். தற்போது கொரோனா பரவல் காரணமாக எங்களால் நேரில் குளத்தில் நின்று பராமரிப்பு பணிகளை முழுமையாக கவனிக்க முடியவில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம், பொக்லைன் உதவியுடன் குளத்தின் உள்பகுதியில் மீண்டும் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும். குளத்தில் கழிவுநீர் இணையும் பகுதி இருந்தால் அவற்றை மாற்றிவிட வேண்டும்.

குறிப்பாக கால்வாய்க்கு  மழைநீர் வரத்து பகுதிகளை சீரமைப்பது அவசியம். வேய்ந்தான்குளத்தின் வடபகுதி கரையில் சென்றால் பெருமாள்புரம் பகுதியில் இருந்து மேலப்பாளையம் சிக்னல் பகுதிக்கு எளிதாக சென்றுவிட முடியும். எனவே ஏற்கனவே போடப்பட்ட இந்த பகுதி கரையை மேலும் அகலப்படுத்தி பேவர்பிளாக்  பதித்து கொடுத்தால் சிறிய வாகனங்கள் செல்லவும், நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் பலனாக இருக்கும். சமூகவிரோதிகள் நடமாட்டம் குறைந்து குளக்கரையும் பாதுகாப்பாக இருக்கும். இந்த பணிகளை மழைக்கு முன்விரைவாக மேற்கொள்ள வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்த குளத்தை இணைத்து கூடுதல் வசதிகளை செய்ய வேண்டும் என்றார்.

Tags : Will the birds' habitat be dry?
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...