×

கோவை குளங்களில் கலக்கும் சாக்கடை கழிவு விஷமாகும் தண்ணீர்-பாழாகும் விவசாயம்

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உக்கடம் பெரியகுளம்,வாலாங்குளம்,முத்தண்ணன் குளம்,செல்வசிந்தாமணி, கிருஷ்ணாம்பதி, நரசாம்பதி, செல்வம்பதி, சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம் உள்பட 9 குளங்கள் உள்ளன. இவைதான், மாநகர் பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரம் ஆகும். மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்ட போர்வெல்கள், வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்கள் ஆகியவற்றுக்கு இந்த குளங்கள் மூலமாகத்தான் நிலத்தடி நீர் கிடைக்கிறது.
கோவை உக்கடம் பெரியகுளத்தின் பரப்பளவு 327 ஏக்கர் ஆகும். இந்த குளத்தில் நீர் நிரம்பியதும் அது வாலங்குளத்திற்கு செல்கிறது. வாலங்குளத்தின் பரப்பளவு 160 ஏக்கர் ஆகும். இதனை சுற்றியுள்ள 5 கி.மீ சுற்றளவிலான பகுதிகள் நிலத்தடி நீர் காரணமாக பெரிதும் பயன்பெறுகின்றன.

அதேபோல், நொய்யல் ஆற்றை அடிப்படையாக கொண்டு, கோவையை சுற்றி கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி, சிங்காநல்லூர் குளம், உக்கடம் பெரிய குளம், குனியமுத்தூர் செங்குளம், வாலாங்குளம் உள்ளிட்ட 22க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இவையும், அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர் உயர காரணமாக இருக்கின்றன. இத்தனை குளங்களில் தற்போது தண்ணீர் நிரம்பியிருந்தாலும், அவை மாசடைந்து காணப்படுகிறது. குளங்களில் கட்டிட கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், சாக்கடை நீர் கலப்பதால் தண்ணீர் அடியோடு மாசுபடுகிறது. நிலத்தடி நீரும் மாசாகிறது. இதனால், போர்வெல் தண்ணீரும் சுத்தமாக கிடைப்பது இல்லை. விவசாயம் மற்றும் இதர தேவைகளுக்கு பாதுகாப்பாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குளங்களில் சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுக்க ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள் மூலம் குளங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி நிர்வாகம் குளக்கரைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம் கரைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன. ஆனாலும், அரசு மருத்துவமனை கழிவு, சில தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு, இக்குளங்களில் மிக தாராளமாக கலக்கின்றன. இதனால், குளம் மாசடைவது தொடர் கதையாக உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் ரூ.500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக, உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளம் ஆகிய இரு குளங்களில் ரூ.255 கோடி மதிப்பில் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அதேபோல், குறிச்சி குளக்கரையில் ரூ.52 கோடியில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கழிவு நீர் சுத்திகரிப்புக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த குளங்களின் நீர் வழிப்பாதைகளை மீட்பது, அவற்றை தூர் வாரி, குப்பை கொட்டாத வகையில் தடுப்பது, சாக்கடை நீர் கலக்காமல் தடுப்பது மற்றும் இயற்கை வழிகளில் அதனை சுத்திகரிப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரில் தொழில் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. குளங்கள், ஆறுகள் போன்றவற்றில் கலக்கும் சாக்கடை நீர், தொழிற்சாலை கழிவுகள் காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது. விளைநிலம் கெட்டுப்போகிறது. இதுபற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது: கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் விவசாயிகள், விவசாயம் செய்து வருகின்றனர். இதில் தென்னை, பருத்தி மற்றும் வாழை சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல், முட்டைகோஸ், வெண்டைக்காய், தக்காளி போன்ற பல்வேறு காய்கறி விவசாயம் மற்றும் மக்காச்சோளம் போன்ற மானாவாரி விவசாயம் நடக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் நிலத்தடி நீராதாரத்தை நம்பியே உள்ளனர். குளங்கள், குட்டைகள், ஆறுகள் போன்றவற்றில் உள்ள தண்ணீர் சாக்கடைக்கழிவு, சாயப்பட்டறை கழிவு மற்றும் இதர கழிவுகளால மாசடைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. இதன்காரணமாக, விவசாயம் பாதிக்கப்படுகிறது.

மேற்குதொடர்ச்சி மலையில் இருந்து வரும் நொய்யல் நதி, பெரும்பள்ளம் ஒடை, மேட்டுப்பாளையம் பவானி ஆறு போன்றவை சாயப்பட்டறை மற்றும் சாக்கடை கழிவுகளால் மாசடைந்துள்ளன. இதனால் விவசாயம் மட்டுமின்றி, அப்பகுதிகளில் உள்ள மக்களின் குடிநீர் தேவைகளும் பாதிக்கப்படுகிறது. பல இன்னல்களுக்கு மத்தியில் விவசாயம் செய்ய வேண்டியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், விவசாயம் பாதிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளான காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். குளம், குட்டைகளில் உள்ள மாசடைந்த நீரை குடித்து கால்நடைகள் வளர்கின்றன. இதனால், அவைகளும் பாதிக்கப்படுகின்றன. விவசாயத்தை காப்பாற்ற குளம் உள்ளிட்ட நீராதாரங்களில் கழிவுகள் கலப்பதை அடியோடு தடுக்க வேண்டும். இவ்வாறு சு.பழனிசாமி கூறினார்.

* ரூ.230 கோடியில் சீரமைப்பு
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள நொய்யல் ஆற்றை சீரமைக்க தமிழக அரசால் ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறுகையில், ‘’நொய்யல் ஆற்றில் மொத்தம் உள்ள 21 அணைக்கட்டுகளில் 18 அணைக்கட்டுகளும், முறைசார்ந்த குளங்களில் 22 குளங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வாய்க்கால்களில் சிமெண்ட் லைனிங் மற்றும் சிதிலமடைந்த அணைக்கட்டின் பகுதிகள், வாய்க்காலின் மதகுகள், குளங்களை தூர்வாருதல், ஆற்றினை தூர்வாருதல், முட்புதர்கள் அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகளும் நடக்கிறது. நொய்யல் ஆற்றில் நேரடியாக சாக்கடை கழிவு கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றனர்.

Tags : ponds ,Coimbatore , Sewage effluent mixed in Coimbatore ponds is poisonous water-wasting agriculture
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...