×

பல ஆண்டுக்கு முன் மூடப்பட்ட பள்ளிக்கூடம் கல்வி செல்வம் இழந்த செல்லப்பா வார்டு

தங்கவயல்: தங்கவயல் மாரி குப்பம் செல்லப்பா‌ வார்டில் இருந்த செல்லப்பா பள்ளி ஏராளமான ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், டாக்டர்கள், விஞ்ஞானிகள் என உருவாக்கி பல வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டு இன்று பாழடைந்த கட்டிடமாக பரிதாப நிலையில் உள்ளது. தங்கவயல் நகர சபையின் எண் 9 செல்லப்பா வார்டில் அந்த காலத்தில் சுடுகாட்டு லைன் என்று அழைக்கப்பட்ட இன்றைய ஆர்.டி.பிளாக், 1.பி.ஒ.லைன், சேட் லைன், எட்கர் போலீஸ் குவார்ட்ரஸ், ஆகிய குடியிருப்பு பகுதிகள் அடங்கி உள்ளன. பி.ஜி.எம்.எல். தொழிலாளர் குடியிருப்புகளின் கடைசி பகுதியாக இது உள்ளது. இதை அடுத்து நாகவரம் காட்டு பகுதி தான். அதே போல் வார்டு முழுவதும் காடு போல் புதர்கள் மண்டி கிடக்கிறது. இதில் பாம்புகளுக்கு பஞ்சமே இல்லை. இந்த வார்டில் கல்வி சேவையில் சிறந்து விளங்கிய செல்லப்பா பள்ளி பல வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது. ஆயிரக்கணக்கான கல்வியாளர்களை உருவாக்கிய இந்த பள்ளி பாழடைந்த நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறது.

ஆர்.டி.பிளாக் என்று அழைக்கப்படும் அந்நாளைய சுடு காட்டு லைன் பகுதியில் 1885 வருடம் கட்டப்பட்ட கத்தோலிக்க கிறித்தவ மதத்தினரின் புனித அந்தோனியார் கோயில் உள்ளது. இன்றும் நல்ல நிலையில் உள்ள இந்த கோவிலின் பக்கத்திலேயே மாரியம்மன் கோவில் உள்ளது. இது குறித்து முன்னாள் ராணுவ வீரர் வனத்தையன் கூறும் போது,இந்த பகுதி மக்கள் மத பேதமின்றி வாழ்கிறோம். அந்தோணியார் திருவிழாவை இந்து மக்களும் ஒன்றிணைந்து நடத்துகிறோம். அதே போல் மாரியம்மன் திருவிழாவில் கிறிஸ்துவ மக்கள் கலந்து கொள்கிறார்கள். வேறு எந்த ஊரிலும் இது போன்ற மத நல்லிணக்கத்தை காண முடியாது என்றார். வார்டில் பொது கழிவறை இல்லை. தங்க சுரங்கம் செயல்பாட்டில் இருந்த போது, பயன் பாட்டில் இருந்த பொது கழிவறைகள் இன்று பாழடைந்து சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

ஆர்.டி.வட்ட பஞ்சாயத்து தலைவர் பட்டாபி கார்த்திகேயன் கூறும் போது,தெரு விளக்குகள் ஒன்று கூட எரிவதில்லை. சாலைகள் பழுதடைந்துள்ளது. குடியிருப்புகளில் புதர் மண்டி கிடக்கிறது. நகர சபை கவுன்சில் இன்னும் கூட வில்லை. நகர சபை அலுவலகத்தில் பல முறை புகார் செய்தும் கண்டு கொள்வதில்லை. கழிவு நீர் கால்வாய்கள் சேறும் ‌சகதியும் அடைந்து கழிவு நீர் தேங்குகிறது. இந்த அவலம் எல்லாம் என்று தீரும் என்று தெரியவில்லை. புதிய பொது கழிப்பறை கட்டப்பட்டது. பகுதியில் போர்வெல் நீர் வசதி இருந்தும், கழிப்பறைக்கு தண்ணீர் இணைப்பு கொடுக்கப்படாததால் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட பொது கழிப்பறை வீணாக கிடக்கிறது. வார்டுக்குள் குப்பை சேகரிக்கும் குப்பை லாரிகள் வந்து குப்பைகளை சேகரித்து செல்லாததால் குடியிருப்புகளில் குப்பை கூளங்கள தேங்கி கிடக்கிறதுஎன்றார்.

செல்லப்பா வார்டின் மேற்கு பகுதி நாகவரம் கால் நடை மேய்ச்சல் பகுதி என்பதால் இந்த வார்டு மக்கள் ஆடு, மாடு என ஏராளமான கால்நடைகளை வளர்க்கின்றனர். தங்க சுரங்க நிறுவனம் இருந்த காலத்தில் பகுதி தோறும் இரவில் மாடுகளை அடைக்கும்  மாட்டு கொட்டகைகள் இருந்தன. அது போன்ற கொட்டகைகள் தற்போது இல்லாததால், இந்த பகுதியில் மாடுகளை திருடி செல்வது அதிகரித்துள்ளது. நகர சபை நிர்வாகமே அது போன்ற மாட்டு கொட்டைகளை அமைத்து தர வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். விரைவில் நகர சபை தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நடந்து முடிந்து, கவுன்சில் அமைத்தாலாவது வார்டு நல பணிகள் நடை பெறும் என்ற நம்பிக்கையில் செல்லப்பா வார்டு மக்கள் காத்திருக்கின்றனர்.

Tags : school ,pet ward , The school closed many years ago Selappa ward who lost education wealth
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி