×

வேலூர், திருவண்ணாமலை உட்பட 4 மாவட்டங்களில் ஊராட்சிகளில் கேள்விக்குறியான திடக்கழிவு மேலாண்மை திட்டம்: வீதிகளில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகளால் நோய் பாதிப்பு

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை உட்பட 4 மாவட்டங்களில் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. வீதிகளிலும், நீர்நிலைகளிலும், பொதுவெளிகளிலும் தீ வைத்து எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுடன், பல்வேறு நோய் பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலகில் இப்போதைய பெரும் நெருக்கடியாய் அரசாங்கங்களை அலைக்கழித்து வருவது மக்கா குப்பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுதான். இதற்காகவே அரசாங்கங்கள் மக்காத பிளாஸ்டிக், தெர்மோகோல், எலக்ட்ரானிக் கழிவுகளை அகற்றுவதற்கான மாற்றுத்தீர்வை நோக்கி தங்கள் பார்வையை திருப்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கடந்த 2016ம் ஆண்டு முதல் சீரிய முறையில் நடந்து வருவதாக கூறப்பட்டாலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தவிர சிற்றூராட்சிகளில் இத்திட்டம் முழுமையாக கேள்விக்குறியாகியுள்ளது.

இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 743 ஊராட்சிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கடந்த 2015-16ம் ஆண்டு முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு ஊராட்சியில் 150 வீடுகளுக்கு ஒரு தூய்மை பணியாளர், 300 வீடுகளுக்கு ஒரு மூன்று சக்கர வாகனம், மக்கும், மக்கா குப்பைகளை தனித்தனியாக சேகரிக்கும் தொட்டிகள் என வழங்கப்பட்டுள்ளதாக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு ஊராட்சியிலும் திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மக்கும், மக்காக குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும். மக்கும் குப்பைகள் எருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளும் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதன் மூலம் வரும் வருவாய் ஊராட்சி கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், மறுசுழற்சி செய்ய வாய்ப்பில்லாத பல்புகள், கண்ணாடி, பீங்கான், தெர்மாகோல் கழிவுகளும், எலக்ட்ரானிக் கழிவுகளும் ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டும் என்றும் ஊரக வளர்ச்சித்துறையாலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தாலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஆரம்பத்தில் சரியாக செயல்பட்ட இத்திட்டம் ஏனோ தற்போது பெயரளவுக்கு செயல்படுத்தப்படுகிறது. இதற்கு மக்களின் ஒத்துழைப்பின்மை, அதிகாரிகளின் அக்கறையின்மை என பல காரணங்களால் 4 மாவட்டங்களிலும் பெரும்பாலான ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெட்டவெளியிலும், நீர்நிலைகளிலும் எரிக்கப்படுகின்றன.

கிராம ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் 10 முதல் 100 கிலோ வரை மக்கும், மக்கா குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு 4 மாவட்டங்களிலும் 10 முதல் 12 டன்கள் வரை குப்பைகள் சேருகின்றன. இதுதவிர தூய்மை பணியாளரிடம் வழங்காமலேயே பொதுமக்கள் தாங்களாகவே எரிக்கப்படும் குப்பைகள் 1 டன் வரை இருக்கும் என்று ஒப்புக் கொள்கின்றனர் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள். இது மலை கிராம ஊராட்சிகளுக்கும் பொருந்தும் என்கின்றனர் அவர்கள். கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை சிறிய ஊராட்சி முதல் பல்வேறு குக்கிராமங்கள் இணைந்த பெரிய ஊராட்சியாகவும் உள்ளன. குறிப்பாக மலை கிராமங்களின் எல்லை என்பது பல சதுர கிலோ மீட்டருக்கு பரவியுள்ளது. இம்மலை கிராம ஊராட்சிகளில் ஒரு ஊராட்சி எல்லைக்குள் 10 முதல் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் அடங்குகின்றன.

ஒவ்வொரு மலைகிராமமும் பல கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு குப்பைகள் சேகரிப்பு என்பதும், அதை எருவாக்குவது, மறுசுழற்சி செய்வது, சேகரித்து வைப்பது போன்றவை நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதால் ஒட்டுமொத்தமாக மலை கிராம ஊராட்சிகளில் குப்பைகள் எரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு கிராம ஊராட்சிகளில் எரிக்கப்படும் குப்பைகளில் இருந்து வெளியாகும் தையாக்சின், கார்பன்மோனாக்சைடு, நைட்ரஜன் என பல்வேறு நச்சுவாயுக்கள் நல்ல இயற்கை சூழ்நிலை, இயற்கை சமன்நிலை கொண்ட கிராமங்களின் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி வருகிறது. அதோடு கிராமப்புறங்களின் நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்படுகிறது. அதோடு கிராம மக்கள் சுவாசக்கோளாறு, புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் தாக்கும் அச்சத்திலும் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் கிராமங்களில் கால்நடைகள் மேய்ச்சல் நிலங்கள், விளைநிலங்களில் காற்றின் மூலமும், பொதுமக்கள் வீசுவதன் மூலமும் பரவும் பிளாஸ்டிக் கழிவுகளையும், இதர கழிவுகளையும் தங்கள் இரையுடன் சேர்த்து உண்பதால் மரணத்தை சந்திக்கும் அபாயம் மட்டுமின்றி, அவற்றின் உடல் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மட்டுமின்றி, கிராம ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதை ஊரக வளர்ச்சித்துறையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் கிராமங்களின் சூழலியலை பாதுகாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

* ஊராட்சிகளில் மீண்டும் ஆய்வு
கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடு குறித்து வேலூர் மாவட்ட திட்ட இயக்குனர் மாலதியிடம் கேட்டபோது, ‘கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த செயல்பாடுகளை அந்தந்த பிடிஓக்கள், துணை பிடிஓக்கள் கண்காணித்து வருகின்றனர். மக்கும், மக்கா குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து மக்கும் குப்பைகள் எருவாக்கப்பட வேண்டும். மக்கா குப்பைகளில் பிளாஸ்டிக் உட்பட மறுசுழற்சிக்காக வழங்கப்பட வேண்டும். நீங்கள் குறிப்பிடும் புகார் எந்த ஊராட்சி என்றால், அக்குறை சரி செய்யப்படும். அதேநேரத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மீண்டும் ஆய்வு செய்யப்படும்’ என்றார்.

* நடவடிக்கை எடுக்கப்படும்
வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ‘மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மட்டுமின்றி கிராம ஊராட்சிகளுக்கும் வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் இதற்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடு மதிப்பீடு செய்யப்படுகிறது. கொரோனா நெருக்கடியால் மார்ச் மாதம் முதல் கூட்டம் நடக்கவில்லை. பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து வரும் நிலையில், பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்படும். எலக்ட்ரானிக் கழிவுகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட எலக்ட்ரானிக் பொருள் தயாரிப்பு நிறுவனத்திடமே அக்கழிவுகளை ஒப்படைக்க வழியுள்ளது. கிராம ஊராட்சிகளில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பாக புகார்கள் வருகிறது. இதுதொடர்பாக மாவட்ட திட்ட இயக்குனர், பிடிஓக்களிடம் விவரம் கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.

* கண்காணிக்கிறோம்
திருவண்ணாமலை மாவட்ட திட்ட இயக்குனர் பா.ஜெயசுதாவிடம் கேட்டபோது, ‘கிராம ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகளை வீடுகள் தோறும் பெற்று தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று கிராம ஊராட்சி செயலாளர்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதை நாங்கள் கண்காணித்தும் வருகிறோம் என்றார்.

Tags : Districts ,Thiruvannamalai ,Vellore ,Streets , Questionable Solid Waste Management Project in Panchayats in 4 Districts including Vellore and Thiruvannamalai: Disease Affected by Garbage dumped in the streets
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்