×

புதுப்பொலிவு பெற்ற திற்பரப்பு அருவி பூங்கா

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா ஸ்தலமான கன்னியாகுமரிக்கு அடுத்ததாக பெரிய சுற்றுலா ஸ்தலம் திற்பரப்பு அருவி. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் வற்றாத கோதையாறு திற்பரப்பில் அருவியாக  விழுகிறது. இதனால் குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி பயணிகளை மகிழ்விக்கிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் திற்பரப்பு தடுப்பணையில் உல்லாச படகு சவாரி, அருவியின் அருகில் நீச்சல் குளம், கண்களுக்கு விருந்தளிக்கும் பச்சை பசேலென காட்சியளிக்கும் பூங்கா, சிறுவர்கள் பூங்கா என பயணிகளை மீண்டும் மீண்டும் வசப்படுத்தும் சிறப்புகளை கொண்டது. கோதையாற்றில் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, குமரி  மாவட்டத்தை உலுக்கிய ஓகி புயல் போன்றவற்றால் அருவியின் பூங்காக்கள்  சேதமடைந்து காணப்பட்டது. சிறுவர் பூங்காவிலுள்ள விளையாட்டு உபகரணங்கள்  துருப்பிடித்த நிலையில் இருந்தது. இதனை சீரமைக்க திற்பரப்பு பேரூராட்சி  நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதனையடுத்து ரூ.16 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா  சீரமைக்கப்பட்டுள்ளது.

பூங்காக்களிலுள்ள செடிகள் முறையாக பராமரிக்கப்பட்டு அழகு படுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது சிறுவர் பூங்கா மற்றும் பூங்காக்கள் புதுப்பொலிவு பெற்று பயணிகளை வரவேற்க தயாராக உள்ளது. இது குறித்து திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் எட்பின் ஜோஸ் கூறுகையில், திற்பரப்பு அருவியில் தூய்மை பணிகள் செம்மையாக நடைபெற்று 100 சதவிகிதம் சுகாதாரம் பேணப்படுகிறது. பயணிகள் மகிழ்ச்சியடையும் வண்ணம் பூங்காக்கள்  மெருகூட்டப்பட்டுள்ளது. சுற்றுலா வரும் சிறுவர்கள் மற்றும் பயணிகளை இவைகள்  கவரும். ஊரடங்கு விலக்கப்பட்டு சுற்றுலாவுக்கு அனுமதி வழங்கப்பட்டபின் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று அவர் கூறினார்.

Tags : Tirprappu Falls Park , Renovated Tirprappu Falls Park
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை