×

திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறுவழிச்சாலையாகிறது ஈசிஆரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ்

* தானாக முன்வந்து கட்டிடங்களை இடித்த பொதுமக்கள்
* முதற்கட்ட நில எடுப்பு பணிக்கு 778 கோடி ஒதுக்கீடு

சென்னை: திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறுவழிச் சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க இறுதிக்கட்ட நோட்டீசை அதிகாரிகள் வழங்கினர். இதனால், தானாக முன்வந்து பொதுமக்கள் கட்டிடங்களை இடித்து வருகின்றனர். சென்னை திருவான்மியூரில் இருந்து தொடங்கும் கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி வரை சுமார் 135 கி.மீ தூரம் பயணிக்கிறது. இந்தச் சாலையில் திருவான்மியூர் முதல் மாமல்லபுரம் வரை ஏராளமான ஐடி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளன. மேலும் புதுச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் சுற்றுலாதலமான மாமல்லபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் என தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையை தான் பயன்படுத்துகின்றன. இதனால் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலாவுக்காக இந்த இடத்துக்கு வந்து செல்கின்றனர்.

ஈசிஆர் சாலையில் எப்போதும் வாகனங்கள் அதிகளவில் சென்று ெகாண்டே இருப்பதால் போக்குவரத்து ெநரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. எனவே, இச்சாலையை ஆறுவழிச்சாலையாக மாற்ற 2012ல் முடிவு செய்யப்பட்டது. ஆனால், திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை உள்ள 10.5 கி.மீ தூரம் உள்ள சாலை பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக, திருவான்மியூர் முதல் பாலவாக்கம் வரை சாலைகளில் இரு புறங்களும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டன. அந்த கடைகள் உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்த தடை கோரி நீதிமன்றம் வரை சென்றனர். இதனால், அந்த கடைகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.  இதன் காரணமாக, திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை கிழக்கு கடற்கரை சாலையை  கடக்க 45 நிமிடங்களுக்கு மேல் ஆகும் நிலை ஏற்பட்டது. மேலும், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் கிழக்கு கடற்கரை சாலையொட்டி அதிகளவில் வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், கடைகளுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கிழக்கு கடற்கரை சாலையில்தான் நிறுத்தப்படுகின்றன.

எனவே, மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த பகுதிகளில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் நிலை தான் உள்ளது. இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், குறுகிய சாலையாக இருப்பதாலும், சென்டர் மீடியன் மற்றும் போதிய விளக்கு வசதி இல்லாததாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. வாரத்திற்கு 1 முதல் 3 பேர் பலியாகினர். இதனால், கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.  இதையடுத்து இச்சாலையை விரிவுபடுத்தும் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை மீண்டும் கையில் எடுத்தது.  அதன்படி, திருவான்மியூர் முதல் மாமல்லபுரம் வரை, மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை ஆறு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. தற்போது மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, அங்கு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறுவழிச்சாலை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நில எடுப்பு பணிக்கு ₹778 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 6 வழிப்பாதையானது 100 அடி வரை இருக்கும் என்பதால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி போன்ற பகுதிகளில் சாலையோரத்தில் 50 முதல் 80 அடி வரை இடம் தேவைப்படுகிறது. மேலும் சாலை ஒரே மாதிரியாக 30.5 மீட்டரில், அகலமாக அமைக்கப்பட உள்ளதால் தேவையான இடத்தை கையகப்படுத்த நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, அந்த பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள், வீடுகளுக்கு கடந்த மாதம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டன. ஆனால், பலர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்று கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை வழங்கிய கால அவகாசம் முடிந்த நிலையில், பொக்லைன் இயந்திர உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடை, வீடு, வணிக வளாகங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் வந்தனர். ஆனால், கடைகள் வைத்திருந்த ஏராளமானோர் தாங்களே முன்வந்து நெடுஞ்சாலைத்துறைக்கு தேவையான இடங்களில் கட்டிடங்களை மட்டும் இடித்து அகற்றினர். பொதுமக்களே முன்வந்து கட்டிடங்களை இடித்ததால், நெடுஞ்சாலைத்துறை அழைத்து வரப்பட்ட பொக்லைன் இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இடிக்கப்பட்ட பகுதி சாலை அகலப்படுத்துவதற்கு சரியாக உள்ளதா என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்தனர். இதை தொடர்ந்து அந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கல் நடப்பட்டது. தொடர்ந்து திருவான்மியூர் முதல் அக்கரை வரை விரைவில் ஆறுவழிச்சாலைக்கான விரிவாக்கப்பணி தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும்
கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார்(45) டெய்லர்: கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவில்  சுற்றுலாதலங்கள், பொழுதுபோக்கு மையங்கள், ரெஸ்டாரன்ட், பண்ணை வீடுகள், திரையரங்குகள் உள்ளன. இதனால் தினமும் இச்சாலையில் அதிக அளவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினர் வந்து செல்வதால் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் தினமும் வந்து செல்லும். இதனால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் மேலும் ஈஞ்சம்பாக்கம் முதல் திருவான்மியூர் வரை சாலை ஆங்காங்கே சாலையோர கடைகள் உள்ளதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கத்தின் போது அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இப்பணியை விரைவாக முடிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலையோர கடைகள் வைத்திருப்பவர்களுக்கு இடம் ஒதுக்கி அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கடைகள் அமைத்து தர வேண்டும்.


Tags : buildings ,ECR ,Thiruvanmiyur ,road ,Akkarai , Six-lane road from Thiruvanmiyur to Akkarai Notice to demolish occupied buildings in ECR
× RELATED குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி பொருத்தி போலீசார் கண்காணிப்பு