×

மதுராந்தகம் கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்: மாடுகள் வளர்ப்போர் கோரிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சியில் கடந்த 1952ம் ஆண்டு முதல் அரசு கால்நடை மருந்தகம் செயல்படுகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, செயல்படும் இந்த மருந்தகத்தை, கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கால்நடை மருந்தகத்தில் 5000 அலகுகள் வரை சிகிச்சை அளிக்க முடியும். ஒரு அலகு என்பது மாடுகளின் எண்ணிக்கையில் 1, செம்மறி ஆடு, வெள்ளாடு, பன்றி, கழுதைகளில் 10 என பொருள். இதுபோல், ஒரு கால்நடை மருந்தகத்துக்கு 5 ஆயிரம் அலகு வரை சிகிச்சை அளிக்க முடியும். அதற்குமேற்பட்ட எண்ணிக்கையின்படி அப்பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைய வேண்டும் என்பது அரசு விதி.

குறிப்பாக மதுராந்தகம் கால்நடை மருந்தகத்தில் பயன்பாடு பரப்பளவு என்பது நகராட்சிக்கு உட்பட்ட வன்னியர்பேட்டை, செங்குந்தர்பேட்டை, ஆனந்த நகர், கடப்பேரி, மோச்சேரி, மாம்பாக்கம், காந்திநகர் ஆகிய பகுதிகளை கொண்டதாக உள்ளது. இப்பகுதிகளில் தொழில் ரீதியாக வளர்க்கப்படும் கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள், செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை தற்போது 5000 அலகை கடந்து, 7000 அலகுகள் உள்ளதாக கால்நடை துறையினர் கூறுகின்றனர்.

தற்போது, மதுராந்தகம் நகராட்சியில் 7000 அலகுகள் அளவில் விலங்கினங்கள் உள்ளன. இதனால், இங்குள்ள கால்நடை மருந்தகத்தை, கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டால் கால்நடைகளுக்கான எக்ஸ்ரே, ஸ்கேன் ஆகிய வசதிகளோடு, அதற்கான மருத்துவ அலுவலர்களும் நியமிக்கப்படுவார்கள். இதேபோன்று, கால்நடைகளை இரவு நேரங்களிலும் மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க முடியும். கூடுதலாக கால்நடைகளுக்கான மருந்துகள், ஊட்டச்சத்து பொருட்கள் இருப்பு வைக்கப்படும்.

தற்போது, கால்நடைகளுக்கான அறுவை சிகிச்சை போன்ற தேவைகளுக்காக சென்னை வேப்பேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய நிலை உள்ளது. மதுராந்கத்தில், கால்நடை மருத்துவமனை அமைந்தால், இங்கேயே அறுவை சிகிச்சை அளிக்க முடியும். எனவே, தினமும் அதிகளவில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மதுராந்தகம் மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : hospital ,Madurantakam Veterinary Hospital , Madurantakam should upgrade the veterinary dispensary to a veterinary hospital: Demand of cattle breeders
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...