×

அரசு ஊழியர்களுக்கு ரத்து செய்யப்பட்ட ஊக்க ஊதிய அரசாணை ஆசிரியர், மருத்துவர்களுக்கு பொருந்தும்: தலைமை செயலாளர் விளக்கம்

சென்னை: அரசு ஊழியர்களுக்கு ரத்து செய்யப்பட்ட ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணை  ஆசிரியர்கள், பேராசிரியர்கள், இன்ஜினியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட  அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் என தமிழக தலைமை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், இன்ஜினியர்கள், மருத்துவர்கள் போன்றோருக்கு உயர்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் (அட்வான்ஸ் இன்கிரிமென்ட்) வழங்கப்படும். அதேபோல், சார்நிலை பணியாளர்கள் கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் ஊக்க ஊதியம் பெறலாம். இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்குவதை ரத்து செய்து தமிழக அரசு கடந்த 10.3.2020 அன்று அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பொருந்துமா என்ற குழப்பம் இருந்து வந்தது. ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது குறித்து கருவூலம் மற்றும் கணக்கு துறையிடம் அரசு விவரம் கோரியிருந்தது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் விளக்கம் அளித்து ஒரு உத்தரவை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கு ரத்து செய்யப்பட்ட ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், இன்ஜினியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். கடந்த மார்ச் 10ம் தேதிக்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.



Tags : servants ,government teachers ,doctors , Canceled incentive pay for civil servants applies to government teachers and doctors: Chief Secretary's explanation
× RELATED தடய அறிவியல் துறையில்...