×

அரையாண்டு முடிந்து சொத்துவரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகைக்கான கால அவகாசத்தை 45 நாட்களாக அதிகரிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: அரையாண்டு சொத்துவரி ரூ.5000க்குள் செலுத்துவோருக்கான ஊக்கத்தொகையை 10% ஆக அதிகரித்தும், அரையாண்டு முடிந்து சொத்துவரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகைக்கான கால அவகாசத்தை 45 நாட்களாக அதிகரித்தும் சென்னை மாநகராட்சி அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வோர் அரையாண்டும் முடிந்து 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை, அப்படிச் செலுத்தத் தவறினால் 16வது நாளில் இருந்து 2 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும் என்று, சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது, சலுகை கொடுத்து பறிப்பது போல் உள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் பலர் வேலையிழந்து குடும்பச் செலவுகளைக் கூடச் சமாளிக்க இயலாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற சூழலில், முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் 15 தேதிக்குள்ளோ, இரண்டாவது அரையாண்டு வரியை அக்டோபர் 1 முதல் 15 தேதிக்குள்ளோ கட்டவில்லை என்றால், அவர்களுக்கு ஊக்கத்தொகை இல்லை என்பதும், அதுமாதிரி செலுத்தத் தவறியவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்பதும், சிறிதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எனவே, ஒவ்வொரு அரையாண்டிற்கும் ஊக்கத் தொகை அளிக்க வழங்கப்பட்டிருக்கும் 15 நாட்கள் கால அவகாசத்தை, குறைந்த பட்சம் 45 நாட்களாக உயர்த்தி - அரையாண்டு வரி 5000 ரூபாய்க்குள் செலுத்துவோருக்கு இந்த ஊக்கத் தொகையை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். தற்போதுள்ள 2 சதவீத அபராதத் தொகையை அரை சதவீதமாகக் குறைத்திட வேண்டும் அல்லது அறவே ரத்து செய்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corporation of Chennai ,MK Stalin , Increase the incentive period for property tax payers after 45 years to 45 days: MK Stalin's request to Chennai Corporation
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...