×

டெல்டா மாவட்டத்தை போல திருவள்ளூர் மாவட்டத்திலும் நெல் கொள்முதலுக்கு பணம் வாங்கும் அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: டெல்டா மாவட்டங்களைப் போல திருவள்ளூர் மாவட்டத்திலும் நெல் கொள்முதலுக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த மாதம் குறுவை சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர். இதனால், கொள்முதல் நிலையங்களை திறந்து தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால், நெல் மூட்டைகள் ஈரமாக இருப்பதாகவும், போதிய சாக்கு இல்லாதததை காரணம் காட்டியும் தினமும் 600, 700 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இதனால் நெல்மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் சாலையோரத்தில் நெல்மூட்டைகளை அடுக்கி வைத்தும், கொட்டி காயவைத்தும் விவசாயிகள் மாநிலம் முழுவதும் நாள் கணக்கில் காத்துகிடக்கின்றனர். நெல்லை காயவைக்க இடம் இல்லாமல் சாலையோரங்களில் காயவைத்து மூட்டை கொண்டு வந்தால் உடனடியாக எடுப்பதில்லை. ஒரு நாளைக்கு குறைந்த அளவே மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யாமல் இங்கு அடுக்கி வைக்கப்படும் நெல்மூட்டைகள் பனியின் காரணமாக ஈரப்பதம் கூடுதலாக காட்டுகிறது. அரசு ஈரப்பதம் 17 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை மட்டுமே எடுக்க அனுமதியளித்துள்ளது. இது விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது.

தமிழகம் முழுவதும், கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகளால் மூட்டைக்கு ரூ.35 முதல் 40 வரை கமிஷன் வசூலிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 40 கிலோ மூட்டைக்கு ரூ.80 வரை கமிஷன் வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஒரு கொள் முதல் நிலையத்தில் சுமார் 600ல் இருந்து 700 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு மூட்டைக்கு ரூ.40ல் இருந்து ரூ.50, ரூ.80 வரை வாங்குவதாக கூறப்படுகிறது. இதனால், ஒரு நாளைக்கு அதிகாரிகள் ஒருவர் மட்டும் பல லட்சம் ரூபாயை லஞ்சமாக வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நிலை உள்ளது. ஆனால் கஷ்டப்பட்டு, கடன் வாங்கி, விடிய விடிய பாடுபட்டு உழைத்து நெல்லை விளைவித்து விற்பனைக்கு கொண்டு வந்தால், விவசாயிகளை மிரட்டி அதிகாரிகள் லஞ்சமாக கொள்ளையடித்துச் செல்லும் நிலைதான் தற்போது உருவாகியுள்ளது.

இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘ விளைபொருளை விற்க முடியாமல் தவிக்கும் நிலையில், இதற்காக அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது வேதனைக்குரியது. அரசு அதிகாரிகள் சம்பளத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்‘‘ என கூறி கடும் உத்தரவுகளை பிறப்பித்தனர். அதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் மன்னார்குடி அருகே கொள்முதல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.87,890ஐ பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் சிங்கிலிமேடு  கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு விவசாயிகளிடம் விவசாயத்துறை அதிகாரிகள் 40 கிலோ மூட்டைக்கு ரூ.80 வீதம் வசூலித்துள்ளனர். இவ்வாறு பணம் கொடுத்த விவசாயிகளின் நெல்லை மட்டுமே அதிகாரிகள் வாங்கியுள்ளனர். பணம் கொடுக்காத விவசாயிகளிடம் நெல்லை அதிகாரிகள் வாங்கவில்லை. சில விவசாயிகளிடம் மிரட்டி பணத்தை வாங்கியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி குறித்து பெயருடன் புகார் கொடுக்க தயாராக இருப்பதாகவும், அதிகாரிகள் கேட்கும் தகவல்களை தர அவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மாவட்ட கலெக்டராக உள்ள மகேஸ்வரி ரவிக்குமார், நெல்கொள்முதல் செய்வதற்கான கோப்பு வந்தபோது ஒரு மணி நேரத்தில் கையெழுத்திட்டு, உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் விவசாயத்துறை அதிகாரிகளோ, தங்களது துறை சார்ந்த மேலிட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி வாங்கிச் செல்கின்றனர். அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து பணத்தை கொடுக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கையை நீதிமன்றம் கனிவுடன் பரிசீலித்தாலும், தடுக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நியாயமாக நடவடிக்கை எடுப்பார்களா என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : district ,Tiruvallur ,Delta , Officials buying paddy in Tiruvallur district as well as Delta district: Public demand for action
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...