×

வாணியம்பாடியில் துணிகரம் துப்பாக்கி சூட்டில் விவசாயி உயிரை காப்பாற்றிய செல்போன்: வயிற்றில் காயத்துடன் தப்பினார்; 2 பேரிடம் போலீஸ் விசாரணை

வாணியம்பாடி: வாணியம்பாடியில் துப்பாக்கியால் சுட்டு விவசாயியை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் துப்பாக்கி குண்டு செல்போனில் பாய்ந்து சிதறியதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வேலாயுதம்(40). இவரது வீடு மற்றும் விவசாய நிலம் தமிழக- ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் உள்ளது. இவர் நேற்று முன்தினம் இரவு திம்மாம்பேட்டையில் உள்ள கடைக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு பைக்கில் திரும்பினார்.

வீட்டின் அருகே பைக்கை நிறுத்தியபோது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் மீது 2 குண்டுகள் பாய்ந்தது. செல்போன் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். எனினும் செல்போனை துளைத்துக்கொண்டு ஒரு குண்டு அவரது வயிற்றுப்பகுதியில் பாய்ந்து லேசான காயம் ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரவு நேரம் என்பதால், துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பது தெரியவில்லை.

செல்போனில் குண்டு பாய்ந்த  2 துளைகள்  இருந்தது. அதில் ஒரு துளையில் இரும்பு குண்டு சிக்கியிருந்தது. புகாரின்படி திம்மாம்பேட்டை போலீசார், செல்போனில் பாய்ந்த குண்டுகளை கைப்பற்றினர். அவை நாட்டுத்துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் இரும்பு குண்டுகள் என்பது தெரியவந்தது. வேலாயுதத்தை யாரேனும் முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்றார்களா? அல்லது யாரேனும் வேட்டையாட முயன்றபோது குண்டு தவறிப்பட்டதா? என தெரியவில்லை. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருவதாக திம்மாம்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : venture shooting ,Police investigation ,Vaniyambadi ,persons , Cellphone that saved the life of a farmer in a venture shooting in Vaniyambadi: escaped with a stomach injury; Police investigation into 2 persons
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...