×

தமிழகம் முழுவதும் 11 இடங்களில் அதிரடி விஜிலென்ஸ் ரெய்டில் கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் பறிமுதல்: ரிஜிஸ்டர் ஆபீஸ், சோதனைச்சாவடியில் பரபரப்பு

சேலம்: சென்னை, சேலம், நாமக்கல், ஓசூர் உ்ள்பட தமிழகத்தில் 11 இடங்களில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் கட்டுகட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிலம் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் முறைகேடாக பணம் பெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது. இதையடுத்து சென்னை குன்றத்தூர் உட்பட 11 சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று முன்தினம் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமவுலி தலைமையில் அதிகாரிகள், போலீசார் என்று 20க்கும் மேற்பட்டோர்,  சோதனையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை தொடங்கி விடிய, விடிய 12 மணி நேரம் நடந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் 85 ஆயிரம் சிக்கியது. இதுதொடர்பாக சார்பதிவாளர் கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் பரமத்திரோட்டில், மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம் அமைந்துள்ளது. அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பிரிவுகள் மற்றும் பிளாட்டுகளுக்கு இந்த அலுலலகம் மூலம் அப்ரூவல் அளிக்கப்படுகிறது. உதவி இயக்குனர் ரமணி உள்பட 8 பேர் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

பிளாட்டுகளுக்கு அப்ரூவல் அளிக்க ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இங்கு லஞ்சமாக பெறப்படுவதாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு திடீரென போலீசார் அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அப்ரூவல் பெறுவதற்காக கையில் கட்டுக்கட்டாக பணத்துடன் வந்த நபர்கள் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். சிக்கிக்கொண்ட 8 பேரிடம் மட்டும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 12மணி நேரம் நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ.5.25 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

மேஜைக்கு அடியில் சிக்கிய பணம்: தமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஜுஜுவாடி  சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் தலைமையில் ஒரு குழுவினர் நேற்று அதிகாலை ஓசூர் செக்போஸ்ட்களுக்கு வந்தனர். இன்கம்மிங் செக்போஸ்டில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 150 சிக்கியது. மேஜைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த பணத்தை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இரவு பணிக்கு வந்த சில மணி நேரங்களில் ஆர்டிஓ அதிகாரிகள், ஊழியர்கள் வாங்கியுள்ள கணக்கில் வராத பணம் இது என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக செக்போஸ்ட்டில் பணியில் இருந்த மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் சுப்புரத்தினத்திடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இரவு சுமார் 8 மணிக்கு துவங்கிய சோதனை நேற்று அதிகாலை 5.30 மணி வரை நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்தை தங்களது பாக்கெட், மேஜை டிராயர், பைலில் வைத்திருந்தனர். இதுதொடர்பாக துணை தாசில்தார், 2 வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர், அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஒரு புரோக்கர், 2 தற்காலிக ஊழியர் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

பட்டா பெயர் மாற்றம், தொழில், வணிக நிறுவனங்கள் தொடர்பான வருவாய் சான்றுகளுக்கும், கனிம வள முறைகேடு, வழக்கு பதிவு போன்றவற்றிக்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அதுபற்றி விசாரணை நடக்கிறது. இதுபோன்று சென்னை நீலாங்கரை அரசு அலுவலகத்தில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 935 ரூபாயும், குன்றத்தூர் அலுவலகத்தில் 26 ஆயிரத்து 200 ரூபாயும், பம்மல் அலுவலகத்தில் ரூ.12,380ம், திருப்பூர் அவிநாசி எஸ்.ஆர்.ஓ அலுவலகத்தில் 16 ஆயிரத்து 105 ரூபாயும், மதுரை சமூகநலத்துறை அலுவலகத்தில் ரூ.32,430ம், கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ரூ.32,630, திருவண்ணாமலை ஆரணி அரசு அலுவலகத்தில் ரூ.42,690 என மொத்தம் ரூ.12,34,260 ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Millions ,places ,vigilance raids ,Tamil Nadu , Millions of unaccounted money seized in 11 action vigilance raids across Tamil Nadu: Register office
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...