×

தியாகி பென்ஷன் கோரிய 99 வயது முதியவரை 23 ஆண்டுகள் அலைய விட்ட அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்: சென்னை ஐகோர்ட் கண்டனம்

சென்னை: சுதந்திர போராட்ட வீரர்களுக்கான தியாகிகள் பென்ஷன்  கோரிய 99 வயது முதியவரை 23 ஆண்டுகள் அலையவிட்டு இறுதியில் நீதிமன்றத்தை நாடச் செய்த செயலற்ற தன்மைக்காக  அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 99 வயது சுதந்திர போராட்ட வீரர் கபூர், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர். கடந்த 1997ம் ஆண்டு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தனக்கு தியாகிகள் பென்ஷன் வழங்கக்கோரி கபூர் மத்திய அரசுக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்தி பரிந்துரை வழங்கும்படி தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

தமிழக அரசின் பரிந்துரையின்படி கபூரின் மனு மற்றும் ஆவணங்களை பரிசீலித்த பெரம்பூர் தாசில்தார் 2011ல் சென்னை கலெக்டருக்கு விளக்கமான கடிதத்தை அனுப்பினார். அந்த கடிதத்தை பரிசீலித்த சென்னை கலெக்டர் 2015ல் தியாகி கபூரை நேரில் ஆஜராகுமாறு உத்தவிட்டார். அதன்படி 2015ல் உரிய ஆவணங்களுடன் தியாகி ஆஜரானார். ஆனால், 23 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவருக்கு பென்ஷனும் வழங்கப்படவில்லை. இதையடுத்து, தனக்கு பென்ஷன் வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி கபூர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “தனது இறுதி மூச்சுக்கு முன், சுதந்திரப் போராட்ட வீரர் என்ற அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 99 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கபூர் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். தியாகிகள் பென்ஷன் கோரி 99 வயது முதியவரை, நீதிமன்றத்தை நாட செய்த செயலற்ற தன்மைக்காக,  அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும். மனுதாரர் 99 வயதுடையவர் என்பதால் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். எனவே, இந்த மனுவுக்கு நவம்பர் 6ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Tags : Chennai iCourt , 99-year-old martyr should be ashamed of wandering for 23 years: Chennai iCourt condemns
× RELATED ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீதான...