×

வேட்டை பொருட்களுடன் பாரம்பரிய முறைப்படி படையல் இட்டு வழிபட்ட பழங்குடி மக்கள்

மதுரை: மதுரையிலுள்ள பழங்குடி மக்கள் தங்களின் வேட்டை பொருட்களுடன் பாரம்பரிய முறைப்படி படையல் இட்டு வள்ளியை வழிபட்டனர். தமிழ் கடவுள் முருகனின் மனைவி வள்ளி. பழங்குடி குறவர் பிரிவைச் சேர்ந்த வள்ளியை முருகன் காதலித்து திருமணம் செய்தார். பல இடங்களில் உள்ள முருகன் ஆலயங்களில் பெரும்பாலும் முருகன் தனது மனைவிகள் வள்ளி மற்றும் தெய்வானையுடன் அருள் பாலித்து வருகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் குறவர் பழங்குடி (நரிக்குறவர் அல்ல) மக்கள் வள்ளிக்கு பல இடங்களில் கோயில் கட்டி குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

மதுரை எல்லீஸ்நகர் பகுதியில் வள்ளியின் வழி ேதான்றல்களான பழங்குடி மக்கள் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தங்களின் குலதெய்வமான வள்ளி பெருந்தகைக்கு கோயில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 3 நாள் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக கொண்டாடி வரும் இத்திருவிழாவின் போது குறிஞ்சி நிலத்தை சேர்ந்த இந்த பழங்குடி மக்கள், காட்டுப்பகுதிக்கு சென்று வேட்டையாடி, கிடைக்கும் பன்றி, புறா, காடை, முயல், தேன் மற்றும் தினை மாவு, பலாப்பழம் உள்ளிட்டவற்றை படைத்து வழிபடுவது வழக்கம்.  

கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கான திருவிழாவை சில வாரங்கள் தள்ளி வைத்திருந்தனர். குறிப்பாக தற்போது வனப்பகுதிக்கு சென்று வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தங்களின் பாரம்பரிய பழக்க வழக்கத்தை பின்பற்றிடும் வகையில் இந்த வேட்டைப் பொருட்களை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள விநாயகர் கோயிலிலிருந்து பெண்கள் ஊர்வலமாக வந்தனர். மேளதாளங்கள் முழங்க, பழங்குடியின பெண்கள் சுமந்து வந்தனர். சிறுவர்கள் வேடன் வேடமணிந்து வில் மற்றும் அம்புடன் குறவி என்னும் கூத்தாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

வள்ளி கோயில் முன்பு வாழை இலை விரித்து வேட்டை பொருட்களை படையல் வைத்தனர். பின்னர் அனைவரும் தங்களின் குலதெய்வமான வள்ளியை வழிபட்டனர். மதுரை நகர் பகுதிக்குள் பழமை மாறாமல் பாரம்பரிய முறையில் திருவிழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Indigenous people who traditionally marched with hunting supplies
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி