×

மேட்டூர் அணை திறந்து 120 நாட்களுக்கு மேலாகியும் கடைமடையில் தண்ணீருக்காக தடுமாறும் விவசாயிகள்

* சம்பா சாகுபடி முழுமையாக நடக்குமா?
* முறை வைக்காமல் திறக்க கோரிக்கை

சேதுபாவாசத்திரம்: மேட்டூர் அணை திறந்து 120 நாட்களுக்கு மேலாகியும் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டால் சம்பா சாகுபடி முழுமையாக நடைபெறுமா என்று தெரியாததால் முறைவைக்காமல் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையில் நடப்பாண்டு 100 அடிக்கு தண்ணீர் இருந்த நிலையில் டெல்டா மாவட்ட சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையும், ஜூன் 16ம் தேதி கல்லணையும் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு 120 நாட்களை கடந்த நிலையில் கடைமடைக்கு 5 நாட்கள் வீதம் முறைவைத்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

பல்வேறு பகுதிகளில் நாற்று விடுவதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் நேரடி விதைப்பு செய்துள்ளனர். கல்லணையில் இருந்து முழு கொள்ளளவான 4,500 கன அடி தண்ணீர் திறந்தால் தான் கடைமடை வரை தட்டுப்பாடின்றி கிடைக்கும். கல்லனையில் இருந்து வரும் தண்ணீர் ஈச்சன்விடுதி என்ற இடத்தில் பிரியும் வாய்க்கால் வழியாக நவக்குழி என்ற இடத்தில் புதுப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு இருபிரிவுகளாக வந்து சேர்கிறது. ஈச்சன்விடுதியில் 450 கன அடி முழு கொள்ளளவு தண்ணீர் எடுத்தால் தான் கடைமடையை தண்ணீர் எட்டி பார்க்கும். முறை வைக்கப்படாமல் தொடர்ச்சியாக தண்ணீர் வந்தால் தான் ஏரி, குளங்களை நிரப்ப முடியும்.

இதுகுறித்து கல்லணை கால்வாய் கடைமடை விவசாயிகள் சங்க உறுப்பினர் கூத்தலிங்கம் கூறியதாவது: போதுமான மழை பெய்யாததால் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் வறண்ட நிலையிலேயே இருந்து வருகிறது. இதனால் ஆழ்குழாய் கிணறுகள் அனைத்திலும் நிலத்தடி நீர்மட்டம் குறைய துவங்கியுள்ளது. மேட்டூர் அணை கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு ஜூன் 12ல் திறக்கப்பட்டுள்ளது. இந்தாண்டாவது சம்பா சாகுபடிக்கு நாற்று விட ஆடிப்பட்டம் கைகூடும் என விவசாயிகள் எண்ணியிருந்த நிலையில் ஆடிப்பட்டமும் கைகூடவில்லை சம்பா சாகுபடி முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பல்வேறு இடங்களில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முறை மேட்டூர் அணை 100 அடியை எட்டிய நிலையிலும் கடைமடையில் சம்பா சாகுபடி நடைபெறுமா எனபது வேதனையளிக்கிறது. நேரடி விதைப்பு பயிர்களை காப்பாற்ற கூட தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் வதங்க துவங்கியுள்ளது. விவசாயிகள் சாகுபடியை கூட கருத்தில் கொள்ளாமல் ஏரி, குளங்களை நிரப்ப மும்முரமாக இருந்து வந்தோம். ஆனால் எங்களுடைய கனவு கானல் நீராகிவிட்டது. 200க்கும் மேற்பட்ட சிறு சிறு குளங்கள் மற்றும் ஊமத்தநாடு, நாடியம், கொரட்டூர், பெருமகளூர், சோலைக்காடு, விளங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள 2,000 ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய பெரிய ஏரிகள் அனைத்தும் வறண்ட நிலையிலேயே உள்ளது.

ஆனால் அணை திறந்து 120 நாட்களை கடந்த நிலையிலும் போதுமான தண்ணீர் அணையில் இருந்தும் பயன்படவில்லை. கல்லணையில் 4,500 கனஅடி முழு கொள்ளளவு தண்ணீர் எடுத்து சேதுபாவாசத்திரம், புதுப்பட்டினம், நாகுடி பிரிவுகளுக்கு 1,000 கன அடி தண்ணீர் பிரித்தால் தான் மூன்று வாய்க்கால்களிலும் முறை வைக்காமல் தொடர்ச்சியாக தண்ணீர் வழங்க முடியும். அப்போது தான் கடைமடை வரை சம்பா சாகுபடி முழுமையடையும். நேரடி விதைப்புகளை காப்பாற்ற முடியும். ஏரி, குளங்களையும் நிரப்ப முடியும். அப்போது தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பும் வரை கடைமடை பகுதிக்கு கவனம் செலுத்தி முறை வைக்காமல் தொடர்ச்சியாக தண்ணீர் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : opening ,Mettur Dam ,shop , More than 120 days after the opening of the Mettur Dam, farmers are stumbling for water in the shop
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு