×

உலக புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: வரலாற்றில் முதல்முறையாக பக்தர்களுக்கு அனுமதியில்லை.!!!

குலசை: உலக புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலக அளவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன்  கோயில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக பத்து நாட்கள் நடைபெறும். இதில் உள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள்  பங்கேற்பர்.

பக்தர்கள் குறவன், குறத்தி, ராஜா, குரங்கு, கரடி, மாடன், கருப்பசாமி, முருகர், கிருஷ்ணர், அம்மன், கணபதி, சிவன், பெருமாள் மற்றும் காளி வேடங்கள் தரித்து ஊர் முழுவதும் சென்று காணிக்கை வசூல் செய்வார்கள். பின்னர் அதனை  கோயில் உண்டியலில் செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர். திருவிழாவையொட்டி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காப்பு கட்டி விரதம் தொடங்குவர். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று 17-ம் தேதிகொடியேற்றத்துடன்  தொடங்கியது. தொடர்ந்து, கொடிமரத்திற்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அரங்காரம் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக ஞான மூர்த்திஸ்வரர், முத்தாரமனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக  வரலாற்றில் முதல் முறையாக பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது.

இதனைபோல், 26ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம், 27-ம்தேதி நடைபெறும் கொடியிறக்கம் ஆகிய நாட்களில் மக்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் யூடியூப் சேனலிலும், உள்ளுர் தொலைக்காட்சிகளிலும்  நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. மேலும், பக்தர்கள் வேடமணிந்து மேளதாளங்களுடன் கோயிலுக்கு வரவும் அனுமதி மறுத்துள்ளது. அத்துடன் தங்கள் ஊரிலேயே பக்தர்கள் காப்பு அணிந்து வேடமிடுவதோடு ஊரிலேயே விரதத்தை  முடித்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் வரும் 18ம்தேதி முதல் 25ம்தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பூ, மாலை, தேங்காய் பழ வகைள் கொண்டு வர அனுமதியில்லை. 65 வயதிற்கு மேற்பட்டவா்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவா்கள், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் கண்டவா்கள்,  கா்ப்பிணிகள், 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயகுமார் தலைமையில் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : world ,Kulasa Mutharamman Temple Dasara Festival ,history devotees , The world famous Kulasa Mutharamman Temple Dasara Festival started with the flag hoisting: Devotees are not allowed !!!
× RELATED சில்லி பாயின்ட்…