×

கிராம ஊராட்சிகளின் ஒப்புதல் இன்றி பொருட்கள் கொள்முதல் செய்து வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்படுமா?: கூடுதல் விலைக்கு வாங்குவதால் ஊராட்சி நிர்வாகங்கள் அதிருப்தி

வலங்கைமான்: தமிழ்நாட்டில் 385 ஊராட்சி ஒன்றியங்களும் அவற்றில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளும் உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதிக்கு பின்னர் உள்ளாட்சிப் பிரதநிதிகளின் பதவிக்காலம் முடிந்தது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாதபோது தனி அலுவலரின் கட்டுபாட்டில் ஊராட்சிகள் செயல்பட்டது. அ.தி.மு.க அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த போதிய ஆர்வம் காட்டவில்லை. எதிர்கட்சிகளின் தொடர் கோரிக்கை வைத்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கு தேர்தல் நடத்தாமல் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்தியது. அதனையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிகள் பதவியேற்று கொண்டனர்.

புதிதாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொறுப்பேற்று 6 மாதங்களை கடந்த நிலையில் கிராம ஊராட்சிகளுக்கு உரிய பொது நிதி வழங்கப்படவில்லை. மாறாக கிராம ஊராட்சிகளுக்கு மின்கட்டமைப்பு (கணக்கு எண்2) மற்றும் மத்திய நிதிக்குழு மான்யம் (கணக்கு எண்9) ஆகியவற்றிலிருந்து சுமார் இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் வரை கணக்கு எண் ஒன்றிற்கு மாற்றப்ட்டது. அதன் மூலம் மின்விளக்கு, குடிதண்ணீர் உள்ளிட்ட பணிகள் கிராம ஊராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கிராம ஊராட்சிகளில் கடந்த 2018-19ம் நிதி ஆண்டில் அனைவருக்குமான வளர்ச்சி கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பணிகள் குறித்த விளம்பர (பிளக்ஸ்) போர்டு ஒன்றினை வழங்கி அதற்கு ரூபாய் ஒன்பதாயிரத்து 300 ரூபாய்க்கான காசோலையை அரசு கேட்டு வருகிறது. அதிகபட்சம் மூவாயிரம் மட்டுமே செலவு ஆக கூடிய பிளக்ஸ் போர்டுக்கு கூடுதலாக ரூபாய் ஆறாயிரம் வரை வசூல் செய்கிறது. ஊராட்சிகள் கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் 2018-19ம் நிதி ஆண்டில் கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து 2020-21 ம் நிதி ஆண்டில் அதுவும் கூடுதல் தொகை கொடுத்து விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என உள்ளாட்சிப்பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

மேலும் குப்பைகள் சேகரிப்பதற்கென அந்தந்த ஊராட்சிகளின் மக்கள் தொகை அடிப்படையில் இரண்டு முதல் ஐந்துக்கும் மேற்பட்ட வண்டிகள் மாநில அளவில் கொள்முதல் செய்யப்பட்டு கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தரமற்ற குப்பை வண்டிகள் ஊரக வளர்ச்சித்துறையால் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கு உரிய பட்டியல் தொகை அடக்கவிலையை விட பலமடங்கு கூடுதலாக கிராம ஊராட்சியிலிருந்து காசோலையாக கேட்கப்படுகின்றது. அதேபோல் பிளிச்சிங் பவுடர், குப்பை சேகரிக்க உதவக்கூடிய சிறிய அளவிலான உபகரனங்கள் ஆகியவையும் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு கிராம ஊராட்சிகளுக்கு கூடுதல் தொகைக்கு வழங்கப்படுகின்றது.

முன்னதாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாதபோது கிராம ஊராட்சிகள் தனி அலுவலரின் கட்டப்பாட்டில் செயல்பட்டபோது மின்விளக்குகள் உள்ளிட்டவை அரசால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நடைமுறையை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொறுப்பேற்ற பிறகும் கிராம ஊராட்சிகளுக்கு தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை அதிக விலைக்கு வாங்கி கிராம ஊராட்சிகளுக்கு வழங்கும் நடைமுறை தற்போதும் தொடர்வதற்கு உள்ளாட்சிப்பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
முன்னதாக மத்திய அரசின் 14வது நிதிக்குழுவின் பரிந்துரையின்பேரில் கிராம ஊராட்சிகளுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற ஒதுக்கீடு செய்யப்ட்ட தொகையினை ஊராட்சி மன்றங்களின் தீர்மானங்கள் இல்லாமல், கிராம ஊராட்சியின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அலுவலர் மூலமாக திட்டங்களை தேர்தெடுத்து செயல்படுத்த டெண்டர் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊராட்சித் தலைவர்கள் உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கினை அடுத்து நேற்று முன்தினம் சென்னை உயர்நீதி மன்றம் டெண்டர்களை ரத்து செய்து உத்தரவிட்டது என்பது குறிப்பிட தக்கது.

அதேபோல் மாநில அரசால் மொத்தமாக பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு கூடுதல் விலைக்கு கிராம ஊராட்சிகளுக்கு வழங்குவதால் ஏற்படும் நிதி இழப்பினை சரிசெய்திடும் விதமாக கிராம ஊராட்சிகளின் தேவையறிந்து தற்போதைய நிதிநிலைக்கு ஏற்ப குறைந்த விலையில் தரமான பொருட்களை கொள்முதல் செய்திடவும், கிராம ஊராட்சிகளின் ஒப்புதலின்றி கிராம ஊராட்சிகளுக்கு தெரியாமலே பொருட்களை கொள்முதல் செய்து வழங்கும் நடைமுறையினை அரசு ரத்து செய்ய வேண்டும் என ஊராட்சித் தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village panchayats ,purchase ,administrations ,Panchayat , Of village panchayats, approval, purchase, procedure, cancellation
× RELATED நெல்லை டவுனில் சிறுமிகள் தீபம் ஏற்றி யோகா பயிற்சி