×

முழுமையாக இயக்கப்படாததால் 70 சதவீத கிராமங்களுக்கு பஸ் இல்லை: பரிதவிக்கும் மக்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் கிராம மக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25 முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. ஜூன் மாதம் பஸ் போக்குவரத்து மண்டலங்களுக்குள் தொடங்கப்பட்டு பின்னர் மீண்டும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் செப்.1 முதல் மாவட்டத்திற்குள்ளும், செப்.7 முதல் மாவட்டம் விட்டு மாவட்டமும் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இருந்து காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர், இளையான்குடி, காளையார்கோவில், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளிலும் வெளி மாவட்டங்களான மதுரை, தொண்டி, பரமக்குடி, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ரூட் பஸ்கள், டவுன் பஸ்கள் உட்பட 60 சதவீதம் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பஸ்கள் அனைத்தும் பெரும்பாலும் நகர்ப்புறங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் மூன்று நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 445 ஊராட்சிகள் உள்ளன. இதில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை நகராட்சிகள் மற்றும் சில பேரூராட்சிகள் தவிர மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களே உள்ளன. ஆனால் தற்போது சுமார் 70 சதவீத கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டும் கிராமத்தினருக்கு பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பஸ்களை முழுமையாக இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  கிராம மக்கள் கூறுகையில், கிராமங்கள் துண்டிக்கப்பட்ட பகுதியாக உள்ளன.

ஏற்கனவே கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து குறைவாக இருந்த நிலையில் தற்போது முற்றிலும் போக்குவரத்து இல்லை. அரசு பஸ்களை நம்பியே கிராமத்தினர் உள்ளோம். அரசு பஸ்களே இயங்காத நிலையில் தனியார் மினி பஸ்களும் இயக்கப்படவில்லை. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலத்திற்கும் குறைவாகவே உள்ளன. பஸ்கள் இயக்கப்படாததால் வேலைக்கு செல்வது உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே முன்பு போல் கிராமங்களுக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : villages , For 70 percent of the villages, there is no bus because it is not fully operational
× RELATED அனைத்து பேருந்துகளும்...