வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கலெக்டர்: பொதுமக்கள் பாராட்டு

வேலூர்: வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கலெக்டர் சண்முகசுந்தரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பொதுமக்கள் கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்தனர். வேலூர் விமான நிலைய பணிகள், மாற்றுப்பாதை அமைக்கும் பணிகளை நேற்று மதியம் கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் அலுவலகம் நோக்கி காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது வேலூர் சேண்பாக்கம் அருகே சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த கார் நிலை தடுமாறி திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கலெக்டர் சண்முகசுந்தரம், உடனே காரை நிறுத்தி, விபத்துக்குள்ளான காரில் இருந்த 50 வயதுடைய பெண், கார் டிரைவர் ஆகிய 2 பேரை, பிஆர்ஓ டிரைவர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டார். பின்னர் படுகாயமடைந்த 2 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சாலையில் விபத்துக்குள்ளானவர்களை கலெக்டர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.   இந்த விபத்து குறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>