×

நாடு முழுவதும் 7.71 லட்சம் பேர் தேர்ச்சி நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஒடிசா, டெல்லியை சேர்ந்த 2 பேர் 100/100 தமிழகத்தில் 57,215 மாணவர்கள் தேர்ச்சி

புதுடெல்லி: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், நாடு முழுவதும் 7.71 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒடிசா மற்றும் டெல்லியை சேர்ந்த 2 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். நடப்பு கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில், 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். கொரோனாவால் நீட் தேர்வை எழுதாமல் விட்ட சுமார் 290 பேருக்கு அக்டோபர் 14ல் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே ஏராளமானோர் பார்க்க முயன்றதால் தேசிய தேர்வு முகமையின் இணையதளம் முடங்கியது.

இத்தேர்வில் நாடு முழுவதும் 7 லட்சத்து 71 ஆயிரத்து 500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 3 லட்சத்து 43 ஆயிரத்து 556 ஆவர். அதிகபட்சமாக மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 943 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.குறிப்பாக, ஒடிசாவை சேர்ந்த மாணவர் சோயிப் அப்தாப்பும், டெல்லியை சேர்ந்த அகன்கா சிங் இருவரும் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். நீட் நுழைவுத்தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெறுவது இதுவே முதல் முறையாகும். டைபிரேக்கர் அடிப்படையில் மாணவர் சோயிப் அப்தாப் முதலிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தும்மலா ஸ்னிகிதா, வீனித் சர்மா, அம்ரிஷா கைதான் ஆகியோர் 715 மதிப்பெண்ணுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு நீட் தேர்வு எழுதியதில் 56.44 சதவீதம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு நீட் கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று கல்லூரிகளில் சீட் ஒதுக்கப்படும்.



Tags : Odisha ,Delhi ,Tamil Nadu , 7.71 lakh students across the country pass NEET results: 2 from Odisha, Delhi 100/100 57,215 students pass in Tamil Nadu
× RELATED தமிழகத்தில் வெப்ப அலை வீசும்; மஞ்சள்...