×

ஊரடங்கில் வேலை இழந்தவர்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை 3 மாதங்களுக்கு பெறலாம்: தொழிலாளர் நல அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: ஊரடங்கில் வேலை இழந்த தொழிலாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் பதிவு செய்திருந்தால்,  வேலை இழந்த காலத்துக்கு சம்பளத்தின் ஒரு பகுதியை 3 மாதங்களுக்கு இஎஸ்ஐக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கொரோனா ஊரடங்கால் ஏராளமானோர் வேலை இழந்தனர். இந்த நிலையில், அடல் பீமித் வியக்தி கல்யாண் திட்டத்தின் மூலம், வேலை இழந்தவர்கள் வேலையில்லா காலத்துக்கு சம்பளத்தின் ஒரு பகுதியை பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டம் ஏற்கெனவே அமலுக்கு வந்திருந்தபோதும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்றுதான் வெளியிடப்பட்டது. இதுகுறித்து தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:

 அடல் பீமித் வியக்தி கல்யாண் திட்டத்தின்படி, கொரோனா காலத்தில் வேலை இழந்த தொழிலாளர்கள் தங்கள் சம்பளத்தில் 50 சதவீதத்தை 3 மாதங்களுக்கு கோரி பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் மீண்டும் வேலையில் சேர்ந்திருந்தாலும், வேலையிழந்த காலத்துக்கு இந்த பலன் பெறலாம். இதற்காக இஎஸ்ஐயின் ₹44,000 கோடி நிதியில் இருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெரிய அளவில் விண்ணப்பங்கள் வரவில்லை. இதனால், தொழிலாளர்கள் பலன் பெறும் வகையில் விளம்பரப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

  ஊரடங்கு அமல்படுத்தியதில் இருந்து, அதாவது கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து, வரும் டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வேலை இழந்த தொழிலாளர்கள், 3 மாதங்கள், அதாவது 90 நாட்களுக்கு இந்த திட்டப் பலனை பெற்றுக்கொள்ள தகுதி உடையவர்கள். இந்தத் திட்டம் கடந்த 2018 ஜூலை 1ம் தேதியில் இருந்து அமலில் உள்ளது. சோதனை ரீதியாக 2 ஆண்டுகளுக்கு மட்டும் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டப்படி தொழிலாளர்கள், கடந்த 2018 ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக்கு இஎஸ்ஐ திட்டத்தில் இருந்திருக்க வேண்டும்.

அதோடு, கடந்த 2019 அக்டோபர் 1ம் தேதி முதல் கடந்த மார்ச் 31ம் தேதி வரை குறைந்த பட்சம் 78 நாட்களுக்கு இஎஸ்ஐ திட்டத்தில் பங்களிப்பை வழங்கியிருக்க வேண்டும். வேலை இழப்பதற்கு முந்தைய 4 மாதங்களுக்கான சம்பளத்தின்படி ஒரு நாள் சராசரி சம்பளம் கணக்கிட்டு 90 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு இஎஸ்ஐ இணையதளத்தில் அபிடவிட், ஆதார் நகல், வங்கி கணக்கு விவரங்கள் உள்ளீடு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.  அல்லது சம்பந்தப்பட்ட இஎஸ்ஐ அலுவலகத்தில் மேற்கண்ட ஆவணங்களுடன் நேரில் அல்லது தபாலில் விண்ணப்பிக்கலாம் என்றனர்.


Tags : Ministry of Labor Information , Those who lost their jobs in the curfew can receive a portion of their salary for 3 months: Ministry of Labor Information
× RELATED போலி முத்திரையை பயன்டுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி 2 பேர் கைது