×

ரஷ்யா விஷம பிரசாரம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் குரங்காக மாறி விடுவீர்கள்: இங்கிலாந்து கடும் கண்டனம்

லண்டன்: ‘ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டால் குரங்காக மாறி விடுவீர்கள்,’ என ரஷ்யாவின் விஷம பிரசாரத்திற்கு இங்கிலாந்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பல்வேறு சோதனைகள் நடந்து வருகின்றன. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தடுப்பூசியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையில், ரஷ்யா தனது ஸ்பூட்னிக்-5 தடுப்பு மருந்து அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தது. இந்த மருந்தை தனது மகளுக்கு கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்கமாக அறிவித்தார். ஆனாலும், ரஷ்ய மருந்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதால், அதை வாங்க உலக நாடுகள் முன்வரவில்லை. இதற்கிடையே, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ரஜெனிகா நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த மருந்து இறுதிக்கட்ட ஆய்வில் உள்ள நிலையில், அதைப் பற்றி எதிர்மறை கருத்தை பரப்பும் வகையில் ரஷ்யா விஷம பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

‘ஆக்ஸ்போர்டு மருந்தை பயன்படுத்தினால் குரங்காக மாறி விடுவீர்கள், இங்கிலாந்து பிரதமர் ஆக்ஸ்போர்டு மருந்து பயன்படுத்தியதால் அவருக்கு குரங்கு முகம் வந்து விட்டது,’ என கிராபிக்ஸ் புகைப்படங்களை ரஷ்ய தொலைக்காட்சிகள் வெளியிட்டு வருகின்றன. மேலும், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் ஆய்வக உடையில் ஒரு குரங்கு  இருப்பது போலவும், அஸ்ட்ராஜெனிகா மருத்துவமனை செல்லும் மக்கள், வெளியில் குரங்காக மாறி வருவதாகவும் உள்ள புகைப்படங்களை சமூக வலைதளத்திலும் பரப்பி வருகின்றன. இதற்கு அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் உள்ளிட்ட இங்கிலாந்தை சேர்ந்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Tags : Russia ,Oxford ,UK , Russia poisoning campaign turns into monkey by Oxford vaccine: UK strongly condemned
× RELATED ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை...