×

59.6-ல் இருந்து 70.8-க்கு தாவியது இந்தியர்கள் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 1990ல் 59.6 ஆக இருந்த நிலையில், தற்போது 70.8 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. ஆயுட்காலம் அதிகரித்தாலும் கூட, ஆரோக்கியமான வாழ்க்கை அமையாமல் பலரும் கடைசி கட்டங்களை நோயுடனும், அவதியுடனுமே கழிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன. பிரபல மருத்துவ இதழான ‘லான்செட்’, உலக மக்களின் சராசரி ஆயுட்காலம் குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. பல்வேறு ஆய்வாளர்கள் கொண்ட சர்வதேச குழு நடத்திய இந்த ஆய்வில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில், இறப்புக்கான 286 காரணங்கள், 369 நோய்கள் மற்றும் காயங்கள் ஆகியவை மதிப்பிடப்பட்டன. அதன்படி, இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் சராசரி ஆயுட்காலம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அதிகரித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 1990ம் ஆண்டில் சராசரியாக 59.6 ஆண்டுகளாக இருந்த இந்தியர்களின் ஆயுட்காலம்,  2019ல் 70.8 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. ஆனால், இது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது.

அதிகபட்சமாக, கேரள மக்களின் ஆயுட்காலம் 77.3  ஆண்டுகளாகவும், மிகவும் குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 66.9 ஆண்டுகளாகவும் உள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தொற்று நோய்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட போதிலும், நாள்பட்ட நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒருகாலத்தில் பிரசவத்தின் போது ஏற்படும் மரணங்களே இந்தியாவில் அதிகமாக இருந்தன. தற்போது, பெருமளவில் அது குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், 5வது இடத்தில் இருந்த இதய நோய்கள் இன்று மரணத்திற்கு வழிவகுக்கும் முதலிடத்திற்கு வந்துள்ளது. அதே போல், புற்றுநோய்களின் விகிதாச்சாரம் பெருமளவில் அதிகரித்து வருவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உடல் பருமன், ரத்தத்தில் அதிக சர்க்கரை, காற்று மாசு பாதிப்பு போன்ற நாட்பட்ட நோய்களே கொரோனா மரணங்களை அதிகரித்து இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். உயர் ரத்த அழுத்தம், புகையிலை பயன்பாடு, காற்று மாசு போன்ற ஆபத்து காரணிகளை தடுக்க தவறியதால் உலகம் முழுவதும் இன்று கொரோனா போன்ற தொற்றுநோயின் போது, அதிக பாதிப்பை சந்திப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதே போல், ஆயுட்காலம் அதிகரித்தாலும் இந்தியர்கள் ஆரோக்கியமான ஆயுட்காலத்தை பெறவில்லை என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான காந்திநகர் இந்திய பொதுசுகாதார நிறுவனத்தின் னிவாஸ் கோலி. ‘‘ஆயுட்காலம் அதிகரித்தாலும், மக்கள் தங்கள் வாழ்நாளின் கடைசியில் பெரும்பாலான நாட்களை நோயுடனும், உடல்நலக்குறைவுடனும் அவதிப்பட்டபடியே கழிக்கின்றனர்,’’ என்றார்.

தொற்று அல்லாத நோய்களே மொத்த நோய் சுமையில் 58 சதவீதமாக உள்ளது. இது 1990ல் 29 சதவீதமாக இருந்தது. மேலும், தொற்று அல்லாத நோய்களால் முன்கூட்டியே ஏற்படக் கூடிய மரணங்களின் விகிதம் 22ல் இருந்து 50 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. ‘இந்த ஆபத்து காரணிகளில் பெரும்பாலானவை தடுக்கக் கூடியவை மற்றும் சிகிச்சை அளிக்கக்கூடியவை. அவற்றை கையாள்வது மிகப்பெரிய சமூக மற்றும் பொருளாதார நன்மைகளைத் தரும்,’ என்று அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் முர்ரே கூறியுள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாடு
இந்தியாவில் 1990ம் ஆண்டில் இருந்து ஆரோக்கியத்தை பேணுவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், குழந்தை மற்றும் தாய்வழி ஊட்டச்சத்து குறைபாடு நோய் மற்றும் இறப்பில் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பீகார், உபி போன்ற வடமாநிலங்களில் மொத்த நோய் சுமைகளில் ஐந்தில் ஒரு பங்கை கொண்டிருக்கிறது.

ஹாங்காங் முதலிடம்
உலகளவில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 73.2 ஆண்டாக உள்ளது. இதில், அதிக ஆண்டுகள் மக்கள் வாழும் நாடுகள், அவர்களின் ஆயுட்காலம் வருமாறு:
நாடு        ஆயுட்காலம்         
ஹாங்காங்        85.29 ஆண்டுகள்
ஜப்பான்        85.03 ஆண்டுகள்
மக்காவ்        84.68 ஆண்டுகள்
சுவிட்சர்லாந்து    84.25 ஆண்டுகள்
சிங்கப்பூர்        84.07 ஆண்டுகள்
இத்தாலி        84.01 ஆண்டுகள்
ஸ்பெயின்        83.99 ஆண்டுகள்
ஆஸ்திரேலியா    83.94 ஆண்டுகள்
* இந்த பட்டியலில் இந்தியா 135வது இடத்தில் உள்ளது.

ஆபத்து காரணிகள் 2019ம் ஆண்டில் இந்தியாவில் இறப்புக்கு காரணமாக உள்ள முக்கிய 5 ஆபத்துகள்:
காரணம்            இறந்தவர்கள்
காற்று மாசு            16.7 லட்சம்
உயர் இரத்த அழுத்தம்        14.7 லட்சம்
புகையிலை பயன்பாடு        12.3 லட்சம்
மோசமான உணவு பழக்கம்    11.8 லட்சம்
உயர் ரத்த சர்க்கரை        11.2 லட்சம்
* ஆக மொத்தம், இந்தியாவில் கடந்தாண்டில் இந்த நோய்களால் 66.7 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

Tags : Indians , The life expectancy of Indians increased by 10 years from 59.6 to 70.8
× RELATED அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின்...