×

கிராமப்புற மாணவர் உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி தரும் வரை மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறாது

மதுரை: மருத்துவ படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவின் மீது ஆளுநர் முடிவெடுக்கும் வரை மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்காது என ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு உறுதியளித்தது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அச்சம்பட்டியைச் சேர்ந்த டாக்டர் ராமகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒப்புதல் வழங்காத நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, உள் இடஒதுக்கீடு அமலாகாமல் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத்தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இதேபோல், முத்துக்குமார் என்பவரும் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் தமிழக சட்டப்பேரவையின் மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில்தான் உள்ளது. மசோதாவை ஏற்பதும், நிராகரிப்பதும் அவரது முடிவுக்கு உட்பட்டது. மசோதா மீது முடிவெடுக்க வேண்டும் என்றோ, அதற்கான காலக்கெடுவையோ பிறப்பிக்க முடியாது’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘மசோதாவின் மீது முடிவெடுக்க ஒரு மாதம் போதாதா, நீட் முடிவுகள் வெளியாகி, மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் மசோதாவின் மீது முடிவெடுத்து என்ன பயன், முன்கூட்டியே முடிவெடுக்கலாமே, அரசுப்பள்ளி மாணவர்கள் பலர் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவே முன்வரவில்லை என்பதன் மூலம் அவர்கள் உளவியல் ரீதியாக எந்தளவுக்கு பாதித்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

உள்ஒதுக்கீட்டால் மருத்துவ சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். ரூ.5 லட்சம் வரையில் கட்டணம் செலுத்தி தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற முடியாத நிலையில் பலர் உள்ளனர்’’ என்றனர்.தொடர்ந்து நீதிபதிகள் கூறும்போது, ‘‘ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா என்றே தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு இப்போதுதான்
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் நின்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அந்த நோக்கம் சிதைந்து விடக்கூடாது. எனவே,  மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பும், அதற்கான விவரமும் எப்ேபாது வெளியிடப்படும் என்பது குறித்து, அரசுத் தரப்பில் கேட்டு உடனடியாக தெரிவிக்க வேண்டும்’’ எனக் கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர். இதையடுத்து அட்வகேட் ஜெனரல், அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் நீதிபதிகள் பகல் 12.30 மணியளவில் மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். அப்போது அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘‘நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை செயலரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவின் மீது தமிழக ஆளுநர் முடிவெடுக்கும் வரை மாணவர் சேர்க்கை தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது’’ என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசின் முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக கூறிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவதாகக் கூறி விசாரணையை வரும் 29க்கு தள்ளி வைத்தனர்.

நீதிபதி கண்ணீர்
உள்இடஒதுக்கீடு மசோதா மீது ஆளுநர் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அட்வகேட் ஜெனரல் கூறியபோது, எப்படியாவது ஏழை மாணவர்கள் ஏற்றம் பெற ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா என்று தோன்றுகிறது. கிராமப்புற மாணவர்களின்  சிரமத்தையும், வேதனையையும் அளவிட முடியாது எனக்கூறிய நீதிபதி கிருபாகரன்  தன்னை அறியாமல் நா தழுதழுக்க கண் கலங்கி கண்ணீர் வடித்தார். இதனால்  சிறிதுநேரம் நீதிமன்றத்தில் நிசப்தம் நிலவியது.


Tags : Governor ,Rural Student Allocation Bill , Medical student admission will not take place until the Governor approves the Rural Student Allocation Bill
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...