×

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கோயம்பேடு மொத்த பழ மார்க்கெட்டை திறக்க கோரி வழக்கு: தமிழக அரசு, சிஎம்டிஏ பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயம்பேடு மொத்த பழ விற்பனை அங்காடியை திறக்கக் கோரிய  மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கும்,  கோயம்பேடு சந்தை நிர்வாக குழு தலைமை நிர்வாக அதிகாரிக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னையில் கடந்த மார்ச் மாதம்  கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமானதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இயங்கிய கனிகள் மற்றும் பூக்கள் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் கடந்த மே மாதம் முதல் வாரத்திலும் மூடப்பட்டன.

பின்னர் மொத்த காய்கறி அங்காடி திருமழிசையிலும் கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் தற்காலிகமாக செயல்பட தொடங்கின.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்ததன் அடிப்படையில் தமிழக அரசு  உணவுதானிய மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 18ம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 28ம் தேதியும் திறக்கப்பட்டன.  இந்நிலையில், கனி மொத்த விற்பனை அங்காடியை திறக்க உத்தரவிடக் கோரி சென்னை கோயம்பேடு 4வது நுழைவு வாயில் கனி மொத்த வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பொது செயலாளர் எம்.செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் போதுமான வசதிகள் இல்லை. பதிவு செய்யப்பட்ட 700 வியாபாரிகள் உள்ள நிலையில், அங்கு 200 வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மற்ற வியாபாரிகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.  இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயம்பேடு கனிகள் மொத்த அங்காடியை திறக்க கோரி அளித்த மனுவை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின் பரிசீலித்த அரசு படிப்படியாக அங்காடிகள் திறக்கப்படும் என்று மழுப்பலாக பதில் அளித்துள்ளது.

சில்லறை விற்பனைக்கு அனுமதித்ததே கொரோனா தொற்று பரவலுக்கு காரணமாக அமைந்தது. ஆயுதபூஜை வருவதால் கனிகள் மொத்த அங்காடியை திறக்க அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.  அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், கோயம்பேடு அங்காடி பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.  பணிகள் முடிந்து ஆய்வு மேற்கொண்ட பின் படிப்படியாக அங்காடிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.  இதையடுத்து, காய்கறி அங்காடியில்  சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கில் டிசம்பர் 14ம் தேதிக்குள் தமிழக நகராட்சி நிர்வாக செயலாளர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் சந்தை நிர்வாக குழு ஆகியோர் பதில் தரவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.



Tags : reopening ,corona spread ,Coimbatore ,Government of Tamil Nadu ,CMDA , Case to open Coimbatore wholesale fruit market closed due to corona spread: Tamil Nadu government, CMDA reply
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...