×

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை ரத்து

சென்னை: ரேஷனில் பொருட்கள் வழங்குவதில் தொடர் குளறுபடி காரணமாக தமிழகம் முழுவதும் பயோமெட்ரிக் (கைரேகை) முறை ரத்து செய்யப்பட்டு பழைய நடைமுறையிலேயே ரேஷன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் வகையில், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம், தமிழகத்தில் 2 கோடியே 9 லட்சத்து 44 ஆயிரத்து 864 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 34 ஆயிரத்து 773 ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் நியாய விலை கடைகளில் பயோமெட்ரிக் முறை, அதாவது கார்டு வைத்திருப்பவர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை அமல்படுத்த வசதியாக அனைத்து ரேஷன் கடைகளிலும் பாயின்ட் ஆப் சேல் இயந்திரத்துக்கு மாற்றாக, பயோ மெட்ரிக் எனப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வாங்க வந்தவர்கள், கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பல இடங்களில் கைரேகை பதிவு மிஷின் சர்வர் கோளாறு காரணமாக சரியாக வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் திண்டாடினர். இந்நிலையில், அனைத்து கூட்டுறவு, மண்டல இணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் கடந்த வாரம் திடீரென ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

அதில், “கைவிரல் ரேகையை அங்கீகரிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக யாருக்கும் பொருட்கள் வழங்காமல் இருந்துவிடக் கூடாது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த வழிமுறைகளை பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் பயோமெட்ரிக் முறையே  தொடர்ந்து இருந்தது. இதனால் ரேஷன் பொருட்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். ரேஷன் கடை ஊழியர்களும், கைரேகை முறையை நடைமுறைப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நின்றனர். இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பல இடங்களில் வாய்த்தகராறு ஏற்பட்டது. பொதுமக்களும் பொருட்கள் வாங்க பல நாட்கள் ரேஷன் கடைகளுக்கு நடையாய் நடந்து வந்தனர். ஆனாலும் கடந்த 10 நாட்களாக ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் ஏழை, எளிய மக்கள் பரிதவித்தனர். இதுபற்றிய புகார் தொடர்ந்து தமிழக அரசுக்கும், கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் அறிமுகப்படுத்திய ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமான பயோமெட்ரிக் முறை அதாவது கைரேகை பதிவு செய்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வாங்க முடியும் என்ற திட்டம் நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதை தொடர்ந்து பழைய நடைமுறையே, அதாவது ரேஷன் அட்டையை (ஸ்மார்ட் கார்டு) பாயின்ட் ஆப் சேல் மிஷினில் ஸ்கேன் செய்து ரேஷன் பொருட்கள் நேற்று முதல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்களும், ரேஷன் கடை ஊழியர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags : ration shops , Cancel biometric system in ration shops
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு