உணவு, இறைச்சி கழிவுகளில் மின்சாரம்: மாமல்லபுரம் பேரூராட்சியில் அசத்தல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் இருந்து பெறப்படும் உணவு மற்றும் இறைச்சி கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு, 20 ஆயித்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 5,526 குடியிருப்புகள், 744 வணிக நிறுவனங்கள் உள்ளன. பேரூராட்சியில், ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் மூலம் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில், முதல்நிலை கழிவுகள் சேகரிக்கும் பணியில் 6 சரக்கு ஆட்டோ பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வாகனம் மூலம் 800 முதல் 900 வீடுகளில் தரம் பிரித்து, வார்டுகள் வாரியாக தினமும் பெறப்படுகிறது. இதுபோல், தினமும் 8.5 டன் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.

பின்னர், கழிவுகளை வளம் மீட்பு பூங்காவில் உள்ள எலக்ட்ரானிக் மெஷின் மூலம், அளவுகளை குறித்து, பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறது. இதில், 5.5 டன் மக்கும் கழிவுகள், 3 டன் மக்காத கழிவுகள் ஆகும். மக்கும் கழிவுகளை கொண்டு இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. மண்புழு உரம், கலப்பு உரம்  தயாரிக்க 16 தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக, வளம் மீட்பு பூங்காவில் 100 மற்றும் 50 கனஅடி கொண்ட பயோ காஸ் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, வணிக நிறுவனம் மற்றும் ஓட்டல்களில் இருந்து பெறப்படும் உணவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை எரிசக்தியாக மாற்றி, அதில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 40 மின் விளக்குகள் எரிய வைக்கப்படுகிறது. மேலும், வளம் மீட்பு பூங்காவில் உள்ள இயந்திரங்கள் மற்றும் அறைகளுக்கு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களை இயந்திரம் மூலம் தூள் செய்து, சாலை அமைக்க பயன்படுத்துகின்றனர். எலக்ட்ரானிக் கழிவுகள், இ-வேஸ்டேஜ் துறை சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மாதம் ஒருமுறை அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு பிரிக்க முடியாத கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை விதி 2016ன் படி சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பிகின்றனர். வீடுகளில் இருந்து பெறப்படும் அபாயகரமான கழிவுகளை சானிடரி நாப்கின்கள் இயந்திரம் மூலம் எரிக்கின்றனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, மாமல்லபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையொட்டி 3 ஏக்கர் நிலப்பரப்பில் திடக்கழிவு மேலாண் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. இப்பேரூராட்சியில் அனைத்து பணிகளும் மேற்கொள்ள போதுமான இடவசதி உள்ளது என்றனர்.

Related Stories:

>