×

கண்ணகப்பட்டு கிராமத்தில்வீராணம் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்: அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி கண்ணகப்பட்டு கிராமத்தில் உள்ள வீராணம் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அலட்சியமாக உள்ளனர் என குற்றஞ்சாட்டப்படுகிறது.திருப்போரூர் பேரூராட்சி கண்ணகப்பட்டு கிராமம், 15வது வார்டில் சுமார் 4 தெருக்கள் உள்ளன. இங்கு 300க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகளை ஒட்டி வீராணம் சாலை உள்ளது. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையாக வடிகால்வாய் வசதிகள் செய்யவில்லை. இதனால், பல்வேறு வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீராணம் கால்வாயில் விடப்படுகிறது.

ஆனால், வீராணம் கால்வாயில் இருந்து கழிவுநீர் முகத்துவாரத்துக்கு செல்ல வழி இல்லாததால் அங்கேயே தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.
 இதனால், குடியிருப்பு பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சலை பரப்பு மையமாக மாறிவிட்டது. இது தொடர்பாக, பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகளும், அலட்சியமாக உள்ளனர் என குற்றஞ்சாட்டுகின்றனர்.மேலும், 15வது வார்டில் உள்ள வீடுகளில் சேரும் குப்பைகளையும், பேரூராட்சி பணியாளர்கள் பெறுவதில் அக்கறை காட்டுவதில்லை. இதனால் அப்பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களின் வீட்டு குப்பைகளை தெருவிலேயே கொட்டி செல்கின்றனர். இதுபோல் கொட்டப்படும் குப்பைகள் ஆங்காங்கே எரிக்கப்படுகிறது.

குப்பையில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் காற்றில் பறந்து, வீராணம் கால்வாயில் உள்ள கழிவுநீரில் சென்று விழுகிறது. இதனால் சுற்றுப்புற சுகாதாரம் கெடுவதோடு குடியிருப்பு பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களை பரப்புவதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனவே கண்ணகப்பட்டு 15வது வார்டில் திடக்கழிவு மேலாண் திட்டத்தின்கீழ், குப்பைகளை முறையாக பெற்றுச் செல்ல வேண்டும். தெருக்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.  தெருக்களில் உள்ள மழைநீர் கால்வாய் மூடிகள் உடைந்து பாதுகாப்பற்றதாக உள்ளது. அதனை மாற்றி புதிதாக அமைக்க வேண்டும் என 15வது வார்டு மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : canal ,village ,Veeranam ,Kannakapattu , Sewage stagnant in Veeranam canal in Kannakapattu village: risk of contagion: negligent officials
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்