×

தமிழினத்துக்கு எதிரானவனாக சித்தரிப்பது வேதனை தருகிறது: முரளிதரன் அறிக்கை

சென்னை: இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நேற்று வெளியிட்ட அறிக்கை:  எனது வாழ்க்கை கதையாக உருவாகும் 800 படத்துக்கு பல்வேறு காரணங்களுக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம்‌, நான்‌ பேசிய சில கருத்துகள்‌ தவறாக திரித்து சொல்லப்பட்டதுதான். உதாரணமாக, நான்‌ 2009ம்‌ ஆண்டு தான்‌ என்‌ வாழ்க்கையில்‌ மிக மகிழ்ச்சியான நாள்‌ என்று 2019ல்‌ கூறியதை தமிழர்களை கொன்று குவித்த நாள்தான்‌ முத்தையா முரளிதரனின்‌ வாழ்க்கையில்‌ மகிழ்ச்சியான நாள்‌ என திரித்து எழுதுகிறார்கள்‌, போர் முடிந்து, உயிரிழப்புகள் இல்லாத நாளைத்தான் மகிழ்ச்சியான நாள் என குறிப்பிட்டேன்.

ஒருபோதும்‌ நான்‌ அப்பாவி மக்களின்‌ படுகொலைகளை ஆதரிக்கவும்‌ இல்லை, ஆதரிக்கவும்‌ மாட்டேன்‌. ஐ.நா.வின்‌ உணவு தூதராக இருந்தபோது 2002ம்‌ ஆண்டு விடுதலைப்புலிகளின்‌ கட்டுப்பாட்டில்‌ இருந்த பகுதிகளில்‌ உள்ள பள்ளிக்‌ குழந்தைகளுக்கும்‌ அந்த திட்டத்தை எடுத்து சென்றது முதல்‌ பின்‌ சுனாமி காலங்களில்‌ பாத்திக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நான்‌ செய்த உதவிகளை அந்த மக்கள்‌ அறிவர்‌. போர்‌ முடிவுற்ற பின்‌ கடந்த பத்து வருடங்களாக எனது தொண்டு நிறுவனமான பவுண்டேஷன் ஆப் குட்னஸ் மூலம்‌ ஈழமக்களுக்கு செய்யும்‌ உதவிகள்‌தான்‌ அதிகம்‌. ஈழத்‌ தமிழர்கள்‌ வாழும்‌ பகுதிகளில்‌ எனது தொண்டு நிறுவன கிளைகள்‌ மூலம்‌ குழந்தைகள்‌ கல்வி, பெண்கள்‌ முன்னேற்றம்‌, மருத்துவம்‌ என பலவகைகளில்‌ பல உதவிகள்‌ செய்து வருகிறேன்‌.

நான்‌ இலங்கை அணியில்‌ இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என்‌ மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான்‌ இந்தியாவில்‌ பிறந்து இருந்தால்‌ இந்திய அணியில்‌ இடம்பெற முயற்சித்திருப்பேன்‌. இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா? இவை அனைத்தும்‌ விடுத்து சிலர்‌ அறியாமையாலும்‌ சிலர்‌ அரசியல்‌ காரணத்திற்காகவும்‌ என்னை தமிழ்‌ இனத்திற்கு எதிரானவர்‌ என்பதுபோல்‌ சித்தரிப்பது வேதனையளிக்கிறது. எவ்வளவு விளக்கமளித்தாலும்‌ எதிர்ப்பாளர்கள்‌ யாரையும்‌ சமாதானப்படுத்த முடியாது என்றாலும்‌ என்னைப்‌ பற்றி ஒரு பக்கம்‌ தவறான செய்திகள்‌ மட்டுமே பகிரப்பட்டு வரும்‌ நிலையில்‌ நடுநிலையாளர்களுக்கும்‌ பொதுமக்களுக்கும்‌ இவ்விளக்கத்தை அளிக்கிறேன்‌. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Muralitharan , It is painful to be portrayed as anti-Tamil: Muralitharan statement
× RELATED திருமணமாகி ஒரு வருடமாக குழந்தை இல்லை...