×

மநீம செயற்குழுவில் தீர்மானம்: கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளர்

சென்னை: 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில், முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று மநீம செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம், சென்னையில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கொரோனா விழிப்புணர்வு பணியில் உயிரிழந்த மநீம பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் களப்பணியாளர்களின் சேவையை கவுரவித்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வரும் 2021 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், மநீம கூட்டணி அமைக்கும் கட்சி, போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் போன்றவற்றை முடிவு செய்யும் அதிகாரம் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று முடிவு செய்யப்பட்டது.

தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிய, கமல்ஹாசனால் ‘வேட்பாளர் தேர்வுக்குழு’ நியமிக்கப்படும் என்றும், அந்த குழு பரிந்துரைக்கும் நபர்களில் இருந்து இறுதி வேட்பாளர்களை அவரே தேர்வு செய்வார் என்றும் தீர்மானிக்கப்பட்டது.மநீம கொள்கைகளை மக்களிடம் சேர்க்கவும், தேர்தல் பணிகளை செய்யவும் சிறப்பு குழுக்கள் அமைத்து, அவற்றை ஒருங்கிணைக்கும் மேற்பார்வை குழு அமைக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையம் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலை 2021 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுடன் இணைத்து நடத்தினால், அதில் மநீம போட்டியிடும் என்றும், கிராம சபை கூட்டங்களை ரத்து செய்த அதிமுகவின் சர்வாதிகார போக்கை வன்மையாக கண்டிப்பதுடன், மநீம சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக கூட்டத்துக்கு தி.நகர் நட்சத்திர ஓட்டலுக்கு காரில் வந்த கமல்ஹாசனை தொண்டர்கள் மலர்தூவி வரவேற்றனர். கூட்டத்தில் கொரோனா லாக்டவுன் விதிகள் பின்பற்றப்பட்டன. ஓட்டலுக்கு வெளியே கூடியிருந்த உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது.  கூட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓட்டலை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.Tags : Kamal Haasan ,Manima Executive Committee , Resolution in Manima Executive Committee: Kamal Haasan Chief Ministerial Candidate
× RELATED கடமையை செய்யாத சமூகம் உரிமையை இழந்துவிடும்: கமல்ஹாசன் பேச்சு