×

நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகம் : துப்பாக்கியால் சுட்டால் ‘கியூஆர்’ தோட்டா காட்டி கொடுத்துவிடும்..!; மத்திய பிரதேச போலீசின் அதிரடி

போபால், :நாட்டிலேயே முதன்முறையாக துப்பாக்கி குற்றங்களை கட்டுப்படுத்த ‘கியூஆர்’ தோட்டாக்கள் வழங்கும் திட்டத்தை மத்திய பிரதேச மாநில காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில் முறையான உரிமம் பெற்ற பிறகே ஒருவர் துப்பாக்கியை வைத்திருக்க முடியும். அதுவும் தற்காப்பு, விளையாட்டு, பயிர் பாதுகாப்பு ஆகிய மூன்று காரணங்களுக்காகத்தான் ஒருவருக்குத் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்படுகிறது.  இவற்றை தவிர்த்து எக்காரணத்திற்காகவும், யாரும் அனுமதியில்லாத துப்பாக்கியை வைத்திருப்பது சட்டப்படி குற்றம். அதனையும் மீறி, துப்பாக்கி உரிமம் பெற்றவர் வேறு வகையில் துப்பாக்கியை பயன்படுத்தினால் அவர் குற்றவாளியாக கருதப்படுவார்.

இருந்தும் வடமாநிலங்களில் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் சாம்பல் மலைப்பகுதி மக்கள் துப்பாக்கி உரிமம் கேட்டு அதிகமாக போலீசாரிடம் விண்ணப்பிக்கின்றனர். குறிப்பாக பின்த் மாவட்டத்தில் மட்டும் 22,400 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன. அவர்கள் நிறைய குற்றச்செயல்களில் ஈடுபடுவதால், அம்மாவட்ட காவல்துறை துப்பாக்கி உரிமம் மற்றும் துப்பாக்கி குண்டுகள் விஷயத்தில் அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் எஸ்பி மனோஜ் குமார் சிங் கூறியதாவது:

மத்திய பிரதேசத்தில் ‘கியூஆர்’ குறியீடு கோடுகள் பதிவுசெய்யப்பட்ட துப்பாக்கி  தோட்டாக்கள் விரைவில் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும். நாட்டில் முதல்முறையாக மத்திய பிரதேசத்தில்தான் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. அனைத்து ஆயுத உரிமதாரர்களுக்கும் ‘கியூஆர்’ கோடுகள் உள்ள தோட்டாக்கள்  வழங்கப்படும். ‘்கியூஆர்’ கோடின் ‘பார்கோடு ஸ்கேன்’ செய்யப்பட்டவுடன் துப்பாக்கி வைத்திருக்கும்  நபர் குறித்த தகவல்கள் அனைத்தும் தெரிந்துவிடும். இத்திட்டம், துப்பாக்கிகள் தொடர்பான குற்றங்களை  பெருமளவில் கட்டுப்படுத்தும். மேலும், இதன் மூலம், தோட்டாக்கள் விற்பனையாளர் மற்றும் வாங்குபவரின் தகவல்கள் கிடைக்கும்.

‘கியூஆர்’ கோடு தோட்டாக்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் துப்பாக்கியை பயன்படுத்தும் முன், அதன் உரிமையாளர் சுடுவதற்கு முன்பு பலமுறை யோசிப்பார். பிந்த் மாவட்டத்தில் 22,407 பேர் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்துள்ளனர். சுமார் 10 லட்சம் தோட்டாக்கள் அவர்களிடம் உள்ளன. இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தினால், துப்பாக்கிகளுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும். அழியாத ‘மை’யில் அகச்சிவப்பு கதிர் வழியாக ‘கியூஆர்’ கோடை கண்டறிய முடியும். அந்த ‘மை’யை அவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.



Tags : time ,country ,Madhya Pradesh Police ,
× RELATED 10 ஆண்டுகளில் முதல் முறையாக முன்னணி ஐடி...