×

டெல்லி காற்று மாசு; விளைநிலங்களில் வைக்கோல் எரிப்பைத் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி குழு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : டெல்லியில் அதிகரிக்கும் கடுமையான காற்று மாசுக்கு முக்கிய காரணமான பஞ்சாப், அரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது தான என கண்காணிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி மதன் பி லோகூரை நியமித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.தலைநகர் டெல்லியில் கடந்த இரு வாரங்களாக காற்று மாசு மிகவும் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசுவுக்கு அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாய நிலங்களில் உள்ள அதன் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது தான் என தொடர் குற்றச்சாட்டு உள்ளது. மேற்கண்ட மாசு பிரச்சனையை தடுக்கக்கோரி ஒவ்வொரு வருடமும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்படுவதும், அதுகுறித்து நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிப்பதும் வழக்கமாகி விட்டது. ஆனால் நிலைமை மட்டும் தற்போது வரை சீரடையாமல் தான் இருந்து வருகிறது.

 இந்த நிலையில் டெல்லி காற்று மாசு குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபன்னா மற்றும் ராமசுப்ரமணியன் ஆகியோர் அமர்வில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கிட்டு தாமாக முன்வந்து தலைமை நீதிபதி ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில், டெல்லியின் பக்கத்து மாநிலங்களான பஞ்சாப், அரியானா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து எரிக்கப்படும் பயிர் கழிவுகளால் கடுமையான காற்று மாசு அதிகரித்து அதன் தரம் மோசமடைந்து விட்டது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகிறனர். இதுகுறித்து கட்டுப்பாடுகள் விதித்தாலும் அம்மாநிலத்தில் இருக்கும் விவசாயிகள் அதனை பின்பற்றுவதாக தெரியவில்லை. அதனால் இந்த விவகாரத்தை சரியான முறையில் கையாளும் விதமாக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி மதன் பி லோகூர் இந்த விவகாரத்தை மேற்பார்வை இடுவார்.

இதற்கு மேற்கண்ட மூன்று மாநிலங்களின் சேர்ந்த தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆகியோர் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். அதேப்போல் ஓய்வு பெற்ற நீதிபதி மதன் பி லோகூருக்கு தேவைப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இருந்து நிதி உதவிகள், என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்களையும் பயன்படுத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. மேலும் இந்த தனி நபர் குழு என்பது பஞ்சாப், அரியானா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிப்பது தொடர்பாகவும், அங்குள்ள களநிலவரம் குறித்தும், இதில் டெல்லியில் காற்று மாசு மற்றும் தரம் குறைவு என்பது பயிர் கழிவுகளை எரிப்பதால் தான் ஏற்படுகிறதா? என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்து அதுகுறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதில் டெல்லி காற்று மாசு விவகாரத்தில் பஞ்சாப், அரியான,மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பணியில் இருந்தபோது ஓய்வு நீதிபதி மதன் பி லோகூர் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : Delhi ,judges ,panel ,farmland ,Supreme Court ,
× RELATED காற்று மாசு காரணமாக டெல்லியிலிருந்து வெளியேறினார் சோனியா