×

சவுடுமண் குவாரி செயல்பட தடை விதிக்கப்பட்ட விவகாரம் : 4 வாரத்தில் அனைத்து வழக்கையும் விசாரித்து முடிக்க கோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி,:தென் மாவட்டங்களில் சவுடு மணல் எடுக்கும் விவகாரத்தில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் அடுத்த நான்கு வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் இலந்தை குட்டத்தை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை கிராமத்தை சுற்றி ஜமீன்தார் வலசை, குலசேகரன்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள். விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டவர்கள். இந்த நிலையில் மேற்கண்ட கிராம பகுதிகளில் மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இது கனிம வள விதிகளுக்கு எதிரானது. அனுமதிப் பெற்ற அளவை காட்டிலும் 15 அடி வரை கூடுதலாக ஆழம் தோண்டி எடுக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு கடல்நீர் ஊருக்குள் புகுந்துவிடும் நிலை உள்ளது. எனவே குறிப்பிடப்பட்ட பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும். இதேப்போல் சவடு மண் அல்லது களிமண் எடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியை தவறாக பயன்படுத்தி சில குவாரி உரிமையாளர்கள், சவடு மண்ணுக்கு கீழ் உள்ள ஆற்று மணலை சேர்த்து சட்ட விரோதமாக எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.

 இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம்,சவுடு மண், மணல் எடுப்பது தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்கியதோடு, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க தடை விதித்தது. இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை பரிசீலனை செய்த நீதிமன்றம் எதிர்மனுதாரர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்த நிலுவையில் இருந்த மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஏ.எஸ்.போபன்னா மற்றும் ராமசுப்ரமணியன் ஆகியோர் அமர்வில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா வாதத்தில், இந்த விவகாரத்தில் சவுடு மண்ணுக்கு பதிலாக மணல் அள்ளுவதாக எதிர்மனுதாரர் தரப்பில் கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டாகும் என வாதிட்டார். ஆனால் இதற்கு எதிர்மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவில், சவுடு மணல் அள்ளுவது தொடர்பாக நிலுவையில் இருக்கும் அனைத்து வழக்குகளையும் அடுத்த நான்கு வாரத்து உயர்நீதிமன்றம் விசாரித்து முடித்து ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags : completion ,hearing ,Soutman Quarry: Supreme Court , Soutman, Quarry, Court, Supreme Court, Order
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா