×

7 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் ஆம்னி பஸ் சேவை துவங்கியது: கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை

திருச்சி, :ஏழு மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று முதல் ஆம்னி பஸ் சேவை துவங்கி உள்ளது. முதல்கட்டமாக திருச்சியில் இருந்து இன்று இரவு முதல் சென்னைக்கு மட்டும் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பஸ், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேசமயம் ஆம்னி பஸ்கள் மட்டும் இயக்கப்படாமல் இருந்தது. பஸ்கள் ஓட்டப்படாத காலகட்டத்தில் கட்ட வேண்டிய சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று (16ம் தேதி) முதல் ஆம்னி பஸ்கள் ஓடும் என்று அதன் உரிமையாளர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மத்திய பஸ் நிலையம் அருகே ரயில்வே இடத்தில் ஆம்னி பஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், திருப்பதி ஆகிய பெரு நகரங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது முதல்கட்டமாக இன்று இரவில் இருந்து சென்னைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதுபற்றி திருச்சி மாவட்ட ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘திருச்சியில் இருந்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு 150 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் வரவேற்பு எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக இன்று முதல் 20 பஸ்கள் மட்டும் இயக்கப்பட உள்ளன. அதுவும் சென்னைக்கு மட்டுமே இயக்கப்படுகிறது.கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய கட்டணமே வசூலிக்கப்படும். அரசு வழிகாட்டுதல்படி 60 சதவீத பயணிகள் மட்டுமே ஏற்றப்படுவர். முக கவசம் அணியாமல் வருபவர்கள் பஸ்சில் ஏற அனுமதி இல்லை. பயணிகளை இறக்கி விட்ட பின், கிருமி நாசினி மூலம் பஸ் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.

சாலை வரி ரத்து கோரிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், 6 மாதங்களுக்கு மேல் பஸ்களை இயக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காகவும் இப்போது பஸ்களை இயக்க முன்வந்துள்ளோம். இனிவரும் காலங்களில் பயணிகளின் ஆதரவை பொறுத்து சென்னைக்கும், மற்ற நகரங்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.6 மாதங்களுக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்ததால், பஸ்களில் பேட்டரி சார்ஜ் சரியாக உள்ளதா, ஸ்டார்ட் ஆகிறதா, வேறு எதுவும் பிரச்னை உள்ளதா என நேற்று அனைத்து பஸ்களிலும் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு கூறினார்.

Tags : Omni ,Tamil Nadu , Tamil Nadu, Omni Bus, Service
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...