கேளம்பாக்கம் - கோவளம், திருப்போரூர் - நெம்மேலி இடையே முகத்துவாரத்தில் கொட்டப்படும் நட்சத்திர ஓட்டல் கழிவுகள்: சுற்றுச்சூழல் பாதிப்பதாக பொதுமக்கள் புகார்

திருப்போரூர்: கேளம்பாக்கம் - கோவளம், திருப்போரூர் - நெம்மேலி இடையே, முகத்துவாரத்தில் கொட்டப்படும் நட்சத்திர ஓட்டல் கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கேளம்பாக்கம் - கோவளம் இடையேயும், திருப்போரூர் - நெம்மேலி இடையேயும் முகத்துவாரம் உள்ளது. இந்த முகத்துவாரத்தை ஒட்டி பக்கிங்காம் கால்வாய் அமைந்துள்ளது. கடலோரத்தின் நீர் சுழற்சி காரணமாக முகத்துவாரத்தில் மாதத்தில் 15 நாட்கள் நீர் நிரம்பியும், 15 நாட்கள் நீர் இல்லாமலும் காணப்படும். இங்கு, இயற்கையாகவே நண்டுகள், இறால்கள், கிளிஞ்சல்கள், வளர்கின்றன. இயற்கையான வளர்ப்பின் காரணமாக இவற்றுக்கு அதிக கிராக்கி உள்ளது. இதனால் கடலோரத்தில் வசிக்கும் பாரம்பரிய மீனவர்களும், உள்நாட்டு மீனவர்களும் இதனை பிடித்து தங்களின் வாழ்வாதாரத்தை நடத்துகின்றனர்.

இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் வடநெம்மேலி பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு, அங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி, வார இறுதி நாட்களிலும், வார நாட்களில் இரவு நேரங்களிலும் விருந்துகள் நடக்கின்றன. இதுபோல், விருந்துகள் நடக்கும்போது, அங்கிருந்து உணவுக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மாகோல் தட்டுகள், டம்ளர்கள், கப்புகள், முக கவசங்கள், கையுறைகள், டயாப்பர்கள் ஆகியவற்றை, அந்தந்த ஓட்டல் நிர்வாகங்கள் முறையாக அகற்றுவது இல்லை. நள்ளிரவு நேரங்களில் இவற்றை லோடு வேன் மூலம் கொண்டு வந்து பக்கிங்காம் கால்வாய் மற்றும் முகத்துவாரத்தை ஒட்டி கொட்டி விட்டுச் செல்கின்றன. இவை காற்றில் பறந்து நீர்நிலைகளில் சிதறிக்கிடக்கின்றன.

மேலும், இதனை உண்பதற்காக மாடுகளும், பன்றிகளும் வந்து கழிவுகளை கிளறி அந்த இடத்தையே துர்நாற்றம் வீசும் பகுதியாக மாற்றி விடுகின்றன. கோவளம் மற்றும் நெம்மேலி சாலை முகத்துவாரத்துக்கு வரும் அரிய வகை வெளிநாட்டு பறவைகளும் இந்த குப்பை கழிவுகளை உண்கின்றன. இதனால், மாடுகளின், பால் கறக்கும் தன்மை, வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அவற்றின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நீர்நிலைப் பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளால் இயற்கையான முகத்துவாரம் பாதிப்பு அடைவதோடு சுற்றுச்சூழலும் கெடுவதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

எனவே, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை, முகத்துவாரம் மற்றும் பக்கிங்காம் கால்வாய், நீர்நிலைப் பகுதிகளில் கொட்டுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். ஓட்டல் கழிவுகளை பெற்றுச்செல்ல திட்டம் வகுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஓசியில் அறை, உணவு

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நட்சத்திர ஓட்டல்களில் இருந்து குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவது தெரிந்தும் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள், கலெக்டர் அலுவலக உயர் அதிகாரிகள் விசிட் செய்யும்போது, அவர்களுக்கு தேவையான அறைகள், உணவுகள் இந்த ஓட்டல்களில் இருந்து பெறப்படுகிறது. இதனால், அவர்களது சட்ட விரோத செயல்களை கண்டு கொள்ள முடியாத நிலை உள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த ஒட்டல்கள் சார்பில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து, தினமும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுவதாகவும், இதனால் ஊராட்சி  மக்களுக்கு போதிய குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் கூறினர்.

போட்டா போட்டி

ஒரு நட்சத்திர ஓட்டல் வடநெம்மேலி ஊராட்சியிலும், மற்றொரு நட்சத்திர ஓட்டல் நெம்மேலி ஊராட்சியிலும் அமைந்துள்ளது. இதனால் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி தங்களுடைய கழிவுப்பொருட்கள் இல்லை என்று தப்பிக்கின்றனர். இதுபற்றி விளக்கம் கேட்பதற்காக ஓட்டல் நிர்வாகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறி இணைப்பை துண்டித்துவிட்டனர்.

Related Stories:

>