×

சொத்து தகராறில் தங்கையின் மகனை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: திருவள்ளூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சொத்து தகராறில் தங்கையின் 17 வயது தங்கை மகனை, கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில், 65 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பக்தவட்சலபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர்(65). இவருக்கும் இவரது தங்கை அந்தோணியம்மாள் என்பவருக்கும் இடையே வீட்டுமனை சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 10.01.2018 அன்று இது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில், தங்கை அந்தோணி அம்மாளை தகாத வார்த்தைகளால் பிரான்சிஸ் சேவியர் பேசினார். இதை அந்தோணி அம்மாள் மகன் பாலாஜி தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரான்சிஸ் சேவியர்,  தங்கை மகன் பாலாஜி(17)யை கத்தியால் மார்பு, இடுப்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுதொடர்பாக ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரான்சிஸ் சேவியரை கைது செய்தனர். இவ்வழக்கு குறித்த விசாரணை திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் வி.ஆர்.ராம்குமார் ஆஜராகி வாதாடினார். விசாரணை முடிந்து நீதிபதி செல்வநாதன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், ‘’சொத்து தகராறில் 17 வயது இளைஞர் பாலாஜியை கத்தியால் குத்திக் கொலை செய்த பிரான்சிஸ் சேவியருக்கு, ஆயுள் தண்டனையும்‌, 1000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது’’ என தீர்ப்பு அளித்தார்.  இதையடுத்து பிரான்சிஸ் சேவியரை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.



Tags : court ,Tiruvallur ,nephew , Tiruvallur court hands down life sentence for killing nephew in property dispute
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...