×

சென்னையில் மரங்கள் நிறைந்த தோட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்க்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் மரங்கள் நிறைந்த தோட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க கூடாது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியின் 7 மண்டலங்களில் குப்பை அள்ளுவதற்கான ஒப்பந்தம் ‘அர்பசெர்’ என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்நிறுவனத்திற்கான அலுவலகங்களை கட்ட சோழிங்கநல்லூரில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் பழத்தோட்டம் எனும் இடத்தை வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

இந்த பழத்தோட்டத்தில் மாமரம், பனைமரம், வேப்பமரம், ஆலமரம், புங்கன்மரம், முந்திரி, நாவல் என 250க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. வளர்ச்சி பணிகளுக்காக கூட மரங்களை வெட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் வலியுறுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் குப்பை அள்ளும் நிறுவனத்திற்கு அலுவலகம் கட்டுவதற்காக பசுமை வனத்தை அழிக்க அனுமதிப்பை எந்த வகையிலும் ஏற்க முடியாது. சென்னையில் குப்பை அள்ளும் நிறுவனத்திற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதில் எந்த தவறும் இல்லை.

ஆனால், சோழிங்கநல்லூர் பழத்தோட்டம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே பழைய மாமல்லபுரம் சாலையில் அரசுக்கு சொந்தமாகவும், மாநகராட்சிக்கு சொந்தமாகவும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கும் நிலையில், பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவது ஏன், அங்குள்ள 250க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட முனைவது ஏன், சென்னையின் பசுமைவனத்தை அதிகரிப்பதற்காக அடையாறு, வளசரவாக்கம், முகலிவாக்கம் ஆகிய 3 இடங்களில் ஜப்பானின் மியாவாக்கி முறையில் அடர்காடுகளை வளர்க்க சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் முயற்சி பாராட்டத்தக்கது. ஒருபுறம் இதை செய்து கொண்டு இன்னொரு புறம் பசுமைப் பரப்பை அழித்தால், சென்னையின் பசுமைப்பரப்பை அதிகரிக்கும் முயற்சி சாண் ஏற முழம் சறுக்கிய கதையாகத் தான் இருக்கும்.எனவே, சென்னை சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Tree garden ,Chennai ,company ,Anbumani , Tree garden in Chennai should not be handed over to a private company: Anbumani insists
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...