×

ஜெயலலிதாவுக்காக ஆர்.கே.நகர் தொகுதியை விட்டுக் கொடுத்தவர் அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவுக்கு பலி: அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை: அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 60. கொரோனா தொற்றால் அரசியல் தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மற்றும் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனா தொற்றுக்கு பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் பலரும் உயிரிழந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏவும், அமமுக பொருளாளருமான வெற்றிவேலுக்கு அண்மையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6ம்தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு வாரமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அவரது உடல் நிலை மோசமானதாக தகவல் வெளியானது. இருந்த போதிலும் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். தொடர்நது அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.40 மணி அளவில் உயிரிழந்தார். அவர் உயிர் இழந்த தகவல் கிடைத்ததும் குடும்பத்தினர், உறவினர்கள், அமமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். ஆனால் கொரோனா தொற்றால் இறந்ததால் அவரது உடலை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. சுகாதாரத்துறையினர் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் விதிமுறைப்படி அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். உயிரிழந்த வெற்றிவேல், காங்கிரஸ் கட்சி, தமாகா ஆகிய கட்சிகளில் தீவிரமாக பணியாற்றினார். சென்னை மாநகராட்சி தமாகா கவுன்சிலராகவும், தமாகா குழு தலைவராகவும் இருந்தார். பின்னர் ஜி.கே.மூப்பனார் மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் இணைந்தார். 2011ல் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார்.

அப்போது சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் ஸ்ரீரங்கம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ஜெயலலிதா தனது பதவியை இழந்தார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா மீண்டும் தேர்தலில் போட்டியிட ஏதுவாக தமது ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அப்போது ஆர்.கே.நகரில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி பெற்றார். 2016 சட்டசபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் அதிமுக எம்எல்ஏவானார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது சசிகலா, டிடிவி.தினகரன் அணியில் இருந்தார். அவர்களது நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் வெற்றிவேலும் ஒருவர். பின்னர் கடந்த ஆண்டு பெரம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வெற்றிவேல் 6,281 வாக்குகள் மட்டுமே பெற்றார். பின்னர் டிடிவி.தினகரன், அமமுகவை தொடங்கிய போது அதன் பொருளாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : RK Nagar ,constituency ,treasurer ,leaders ,AIADMK ,Jayalalithaa , Leaving RK Nagar constituency for Jayalalithaa kills AIADMK treasurer Vetrivel Corona: Political leaders mourn
× RELATED நேற்று அதிமுக கூட்டணி இறுதி; இன்று...