முதல்வரின் தாயார் மறைவுக்கு அமித்ஷா இந்தியில் இரங்கல் தெரிவித்தது மத்திய அரசின் வெறித்தனத்தை காட்டுகிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கண்டனம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியில் இரங்கல் கடிதம் எழுதி இருந்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12ம் தேதி (திங்கள்) காலமானார். முதல்வரின் தாயார் மறைவுக்கு முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர், பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முதல்வரின் தாயார் மறைவுக்கு இரங்கல் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் அவரின் இரங்கல் கடிதம் இந்தியில் இருந்தது. இது தற்போது மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளராகவும் செய்தி தொடர்பாளராகவும் உள்ள பொன்னையன் இந்த பிரச்னை குறித்து நேற்று கருத்து தெரிவிக்கும்போது, “அமித்ஷாவின் தாய்மொழி இந்தி இல்லை. இருப்பினும் அவர் இந்தியில் கடிதம் எழுதுகிறார் என்றால், இந்தி திணிப்பில் மத்திய அரசு எவ்வளவு வெறித்தனமாக இருக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு” என்று கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில பாஜ இடம் பெற்றுள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் சட்டங்களுக்கு தமிழக அரசு முழு ஆதரவு கொடுத்து வருகிறது.

மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜ தலைவர்கள் அதிமுகவை பற்றி கூறும் கருத்துக்களுக்கு கூட வெளிப்படையாக அதிமுக தலைவர்கள் பதில் கூறுவது இல்லை. இந்த நிலையில் அதிமுகவில் முக்கிய பதவியில் உள்ள ஒருவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “எனக்கு இந்தி தெரியாது. எனவே, உங்கள் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதி அனுப்புங்கள் என்று கூறி, அந்த கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: