×

நீட் ரிசல்ட் இன்று வெளியாகிறது: தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை: செப்டம்பர் மற்றும் அக்டோபர் 14ம் தேதி என 2 கட்டமாக நடந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக நீட் நுழைவுத் தேர்வு தாமதமாக செப்டம்பர் 13ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு  நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் எழுத பதிவு செய்திருந்தனர். செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதில் நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் பங்கேற்றனர். கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் சிக்கிய மாணவர்கள் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் விடுபட்டவர்களுக்கும் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனால், நேற்று முன்தினம் விடுபட்டவர்களுக்கான மறு தேர்வு நடந்தது. இதில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் எழுதினர். இதையடுத்து இரண்டு கட்டமாக நடந்த நீட் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது. தேசிய தேர்வு முகமையின் இணைய தளமான www.nta.ac.in மற்றும், www.ntaneet.nic.in, ஆகிய இணையதளங்களில்  மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வு முகமை அறிவித்துள்ளது. செப்டம்பரில் நடந்த நீட் தேர்வில் இடம் பெற்ற வேதியியல், மற்றும் உயிரியல் தேர்வுகளில் இடம் பெற்ற கேள்விகளை விட 14ம் தேதி நடந்த நீட் தேர்வில் இடம் பெற்ற வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தின் கேள்விகள் எளிதாக இருந்தன. இதனால் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் கட்ஆப் உயரும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Tags : NEED RESULT RELEASES TODAY: EXAMINATION AGENCY NOTICE
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...