×

வெற்றிகரமான பரிசோதனையில் கொரோனாவுக்கு மற்றொரு தடுப்பூசி: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: கொரோனாவை எதிர்கொள்ள பரிசோதனை நிலையில் உள்ள மற்றொரு தடுப்பூசிக்கு ரஷ்யா அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனாவால் உலகம் முழுவதும் 3 கோடியே 85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை 73 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம் என்று ரஷ்யா ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தற்போது மற்றொரு தடுப்பு மருந்தும், பரிசோதனை நிலையில், நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. செர்பியாவின் வெக்டார் இன்ஸ்டிடியூட்டில் இந்த பரிசோதனையில் முதல் கட்டம் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் கட்ட பரிசோதனையில் மனிதர்களுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், அது பயனளிக்கும் வகையிலும், அதே சமயம் பக்க விளைவுகள் குறைவாகவும் உள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், ‘‘2வது தடுப்பு மருந்து, முதல் கட்ட பரிசோதனையில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருந்தது என்பது உண்மைதான். எபிவாக் கொரோனோ என பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பு மருந்து, அடுத்த கட்டமாக 18 முதல் 60 வயதுள்ள நபர்களுக்கு செலுத்தப்பட உள்ளது.

முதல் கட்ட பரிசோதனை விபரங்களை சமர்ப்பித்து, அடுத்த கட்ட பரிசோதனைக்கான முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது’’ என்று அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளார். மாஸ்கோவின் காமாலயா இன்ஸ்டிடியூட்டில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பிட்ட கொரோனாவுக்கான ‘ஸ்புட்னிக் வி’ என்ற தடுப்பு மருந்து, ஆகஸ்ட் மாத இறுதி முதலே பயன்பாட்டில் உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

Tags : trial ,announcement ,Russia , Another vaccine for coronavirus in successful trial: Russia announcement
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை