×

தென்காசியில் ஒரே முட்டையில் இரண்டு மஞ்சள் கரு

தென்காசி: தென்காசியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டிற்கு வாங்கி வந்த முட்டைகளில் ஒரே சமயத்தில் இரண்டு முட்டைகளில் தலா இரண்டு மஞ்சள் கரு இருந்ததால் ஆச்சரியமடைந்தார். தென்காசியில் வசித்துவரும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மற்றும் எழுத்தாளருமான கு.அருணாசலம் நேற்று தென்காசி ஒப்பனை விநாயகர் கோயில் அருகில் உள்ள ஒரு கடையில் மதிய உணவிற்காக 6 முட்டைகள் வாங்கி வந்துள்ளார். சமைப்பதற்காக இரண்டு முட்டைகளை உடைத்துள்ளார். இரண்டு முட்டையிலும் இரண்டு மஞ்சள் கருக்கள் இருந்தது. இதுகுறித்து தென்காசியை சேர்ந்த கால்நடை மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர் டாக்டர் கந்தசாமி கூறுகையில், ‘முட்டை கோழிகள் பொதுவாக பதினெட்டாவது வாரத்திலிருந்து முட்டையிட துவங்கும். எழுபதாவது வாரம் வரை முட்டை இடுவது வழக்கம்.

30 முதல் 35 வாரங்களில் முட்டையிடும் வேகம் அதிகமாக இருக்கும். பொதுவாக 24 மணி நேரத்திற்கு ஒரு மஞ்சள் கரு வீதம் கோழிகள் வெளியிடுவது வழக்கம். அதன்பிறகுதான் முட்டை ஓடுகள் உருவாகும். சில பண்ணைகளில் ஒரே தரத்து கோழிகள் இருக்கும் நிலையில் 30 முதல் 35வது வாரங்கள் வரை சில சமயம் இரண்டு கரு முட்டைகளை வெளியிட்டு விடும். இதனால் இரண்டு கரு உள்ள முட்டைகள் உருவாகி விடுகிறது. மருத்துவரீதியாக அதில் எந்த குறைபாடுகளும் இல்லை. ஒரு வகையில் பார்த்தால் ஒரு முட்டைக்கு கொடுக்கும் பணத்தில் 2 முட்டை கிடைப்பது லாபம் தான்.

இரட்டைக் கரு முட்டைகளை உணவாக அருந்தக் கூடாது என்பது தவறான மற்றும் பழமையான நம்பிக்கையே ஆகும். கோழிப்பண்ணைகளில் பணிபுரிபவர்கள் இந்த இரட்டை கரு முட்டைகளை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். ஏனெனில் வழக்கமான ஒரு கரு முட்டையை விட இரண்டு கரு முட்டைகள் சற்று அளவில் பெரியதாக இருக்கும். சிலருக்கு இவற்றைத் தேடி எடுத்து உண்ணும் வழக்கமும் உள்ளது. இரண்டு கரு உள்ள முட்டைகள் பிளாஸ்டிக் முட்டைகள் என்பது தவறான கருத்து’ என்றார்.

Tags : Tenkasi , Two yolks in one egg in Tenkasi
× RELATED தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து