×

ஜூவல்லரிக்குள் புகுந்து மேலாளரை மிரட்டிய கும்பல் : விளம்பரத்தை திரும்ப பெற்றது நிறுவனம்

சென்னை,:சர்ச்சைக்குரிய விளம்பர காட்சியை வெளியிட்டதாக குற்றம்சாட்டி,  குஜராத்தில் உள்ள தனிஷ்க் நகைக்கடைக்குள் மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த விளம்பரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது.கொரோனா ஊரடங்கால் ஒட்டுமொத்த தொழில்களும் பாதிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டது. இதனால் மீண்டும் தொழில்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தங்கத்தின் விலை உயர தொடங்கியதால் நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தங்க நகைகள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விதவிதமான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. தீபாவளி உள்பட பண்டிகை சீசன் நெருங்குவதால் தொலைக்காட்சி விளம்பரங்கள் மக்கள் மனதில் ஆழமாக பதியும் வகையில் வெளியிடுகின்றன.

இதன்படி டாடா நிறுவனத்தின் கிளை நிறுவனமான தனிஷ்க் ஜூவல்லரி விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அந்த விளம்பரத்தில், இஸ்லாமிய வீட்டில் வளைகாப்பு. அதில், இஸ்லாமியரை மணந்த இந்து பெண் ஒருவருக்கு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்துவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஹிந்தி மொழியில் இந்த விளம்பரம் வெளியாகியிருந்தது. லவ் ஜிகாத்தை (திருமணம் மூலம் மதமாற்றம்) விளம்பரம் ஆதரிப்பதாக கூறி சிலர் தனிஷ்க் நிறுவனத்துக்கு எதிராக இணையதளங்களில் பதிவிட தொடங்கினர். சமூக வலை தளங்களில், தனிஷ்க் ஜுவல்லரியை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டானது. மற்றொரு பக்கம், இதில் தப்பு இல்லை என்று, பல நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்தனர். இதையடுத்து தனிஷ்க் நிறுவனம் அந்த விளம்பரத்தை திரும்ப பெற்றது. டிவிட்டர் வழியாக விளக்கம் ஒன்றையும் அளித்தது.

அதில், ‘‘இந்த சவாலான நேரத்தில் பல்வேறு தரப்பு மக்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்றாக இணைந்து நிற்பதை கொண்டாடுவதும் ஒற்றுமையின் அழகை கொண்டாடுவதும் இந்த விளம்பர பின்னணியில் உள்ள யோசனை. ஆனால் இந்த வீடியோ அதன் குறிக்கோளுக்கு மாறாக, மாறுபட்ட மற்றும் கடுமையான எதிர்வினைகளை தூண்டிவிட்டது. கவனக்குறைவாக, உணர்ச்சி கொந்தளிப்புக்கு காரணமாகியதால் நாங்கள் மிகுந்த வருத்தப்படுகிறோம். எங்கள் ஊழியர்கள், பார்ட்னர்கள் மற்றும் கடை ஊழியர்களின் நலனை மனதில் வைத்து இந்த வீடியோவை திரும்பப் பெறுகிறோம்’’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த விளம்பரம் நீக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்பி சசிதரூர் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தார். இந்த விளம்பரத்துக்கு நேரடியாக தனிஷ்க் நிறுவனம் மன்னிப்பு கேட்கவில்லை என கூறி குஜராத்தில் உள்ள தனிஷ்க் ஜூவல்லரிக்குள் சில மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கடை மேலாளரை மன்னிப்பு கேட்க மிரட்டியதாகவும் தகவல் வெளியாகின. ஆனால் அப்படி எதுவும் தாக்குதல் நடக்கவில்லை என்று அந்த மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே கடை மேலாளருக்கு அச்சுறுத்தும் வகையில் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. எனவே போலீஸ் ரோந்து போடப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : gang ,manager ,company , Jewelery, gang, advertising, company
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை