×

பாஜ மாஜி அமைச்சர் சின்மயானந்தா மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய மாணவி ‘பல்டி'

லக்னோ,:ஓராண்டுக்கு முன் முன்னாள் மத்திய அமைச்சர் மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய மாணவி, நீதிமன்றத்தில் திடீர் பல்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு பதிலடியாக லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மற்றொரு புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆக. 24ம் தேதி உத்தரபிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள எஸ்எஸ் சட்டக் கல்லூரியில் பயிலும் 23 வயது மாணவி ஒருவர் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தனது கல்லூரி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் சிலர் தன்னிடம் அத்துமீறியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த வீடியோவில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

ஆனால் வீடியோவில் ‘சன்த் சமாஜத்தின் ஒரு பெரிய தலை, பல்வேறு பெண்களின் வாழ்வை சீரழித்தவர். இப்போது என்னையும் கொலை செய்ய முயல்கிறார். அவர் எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். தயவு செய்து உதவுங்கள். அவர் தனது கையில் போலீஸ், உயரதிகாரிகளை வைத்துள்ளார். முதல்வர் யோகி அவர்களையும், பிரதமர் மோடி அவர்களையும் உதவிக்கு அழைக்கிறேன்’ எனக் கூறியிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே சட்டக்கல்லூரி மாணவி திடீரென மாயமானார். அவரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை உச்ச நீதிமன்றத்தை நாடினார். இதையடுத்து,  ராஜஸ்தானில் இருந்து மீட்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சட்டக்கல்லூரியின் உரிமையாளர் முன்னாள் மத்திய அமைச்சரான சுவாமி சின்மயானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இருதரப்பு விசாரணைக்கு பின் சின்மயானந்தா 2019 செப். 20ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்தாண்டு  பிப்ரவரியில் சின்மயானந்தாவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்  ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இவ்வழக்கு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள எம்பி - எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.ேக.ராய் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சின்மயானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டிய சட்ட மாணவி, திடீரென நீதிமன்றத்தில் தனது குற்றச்சாட்டுகளை விலகிக் கொள்வதாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா எனக்கு எதிராக  எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

வழக்கு விசாரணையின் போது புகார் கூறிய மாணவி திடீர் பல்டி அடித்ததால், ஆச்சரியப்பட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட மாணவி மீது  நடவடிக்கை எடுக்கக் கோரியதுடன், தவறான அறிக்கையை வெளியிட்டதற்காக  சிஆர்பிசியின் 340வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கக்ேகாரி நீதிமன்றத்தில் உடனடியாக மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி பி.கே.ராய், ‘மனுவின் நகலை  பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக். 15ம்  தேதி நடைபெறும்’ என்று தெரிவித்தார்.

Tags : student ,Baldi ,Chinmayananda ,BJP , Baja, former minister, Chinmayananda, rape, complaint
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...