×

தாராசுரம் ஐராவதீஸ்வர் கோயில் கங்கைகொண்ட சோழபுரத்தை பாதுகாக்க பராமரிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்

* தொல்லியல்துறை திருச்சி வட்ட கண்காணிப்பாளர் பேட்டி

தஞ்சை: தாராசுரம் ஐராவதீஸ்வர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற உலக பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க, பராமரிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று இந்திய தொல்லியல்துறையின் திருச்சி வட்ட கண்காணிப்பாளர் அருண்ராஜ் தெரிவித்தார். தஞ்சை பெரிய கோயிலில் கட்டுமானம், கல்வெட்டுகள், சிற்பங்கள் மற்றும் பராமரிப்பு பணிகளை தொல்லியல் துறையால் புதிதாக உருவாக்கப்பட்ட திருச்சி வட்டத்தின் தொல்லியல் கண்காணிப்பாளர் அருண்ராஜ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய தொல்லியல் துறையில் சென்னை வட்டத்தில் இருந்து தற்போது திருச்சி வட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நீலகிரி மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை 21 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில் 162 புராதன சின்னங்களை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதில் மிக முக்கியமாக உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் இடம் பெற்றுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள புராதன சின்னங்களில் குறைபாடு இருந்தால் உடனடியாக ஆய்வு செய்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று சரி செய்யப்படும். தஞ்சை பெரிய கோயிலில் தற்போது நவீன மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நவம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற விளக்குகள் நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விளக்குகளால் கோயிலின் பழமையான தோற்றம் மாறாது.

அத்துடன் சிற்பங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஒருசில புராதன சின்னங்களில் சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில் 21 மாவட்ட கலெக்டர்கள், எஸ்பி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாராசுரம் ஐராவதீஸ்வர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற உலக பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க, பராமரிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார். ஆய்வின்போது முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் மற்றும் தொல்லியல்துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.

Tags : Cholaspuram ,Darasuram Iravadeeswarar Temple ,Ganges , Darasuram Iravadeeswara Temple, Gangaikonda Cholapuram, will be the focus
× RELATED கங்கை ஆற்றங்கரையில் வழிபாடு நடத்திய...