×

மழையால் அழுகுவதால் வரத்து குறைவு சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

சின்னமனூர்: மழையால் செடிகள் அழுவதால் சின்ன வெங்காயம் வரத்து குறைந்து ஒரு கிலோ ரூ.80 வரை உயர்ந்துள்ளது. சின்னமனூர் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கர் வயல்வெளிகளில் இரு போகம் நெல் சாகுபடி விவசாயம் முல்லை பெரியாற்று பாசனத்தில் நடக்கிறது.மேலும் நிலத்தடி மற்றும் ஆழ்குழாய் பாசனத்தில் எரசக்கநாயக்கனூர், சின்ன ஒவுலாபுரம், சீலையம்பட்டி, காமாட்சிபுரம், சீப்பாலகோட்டை, குச்சனூர், துரைசாமிபுரம், மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தனிப்பயிராகவும், தென்னை உட்பட பல இடங்களில் ஊடுபயிராகவும் குறுகிய கால பயிரான 70 நாட்களில் அறுவடைக்கு வரும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தேனி மாவட்ட வெங்காயம் உள்ளூர் தவிர்த்து வெளி மாவட்டங்களுக்கும், கேரளா மாநிலத்திற்கும் அன்றாடம் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்து இருந்ததாலும், வெளிமாவட்டத்திலிருந்து தேனி மாவட்டத்திற்கும் அதிகளவில் வந்ததாலும் தர வாரியாக ஒரு கிலோ ரூ.40, ரூ.30 வரையே ஸ்டெடியான விலையாக இருந்தது.

தற்போது கடந்த ஒரு மாதமாக மழை காரணமாக விதைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயத்தில் மழைநீர் தேங்கியதால் செடிகள் அழுகல் ஏற்பட்டது, உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. அதேநேரம் சின்ன வெங்காயத்தின் தேவையும் அதிகரித்திருப்பதால் சந்தைக்கு குறைந்தளவு ஏலத்திற்கு வருவதால் விலை விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டு தற்போது ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் வாங்க முடியாமல் கண்ணீர் விடும் நிலை உருவாகியிருக்கிறது.

Tags : Due to rains, supply is low, small onions, prices are high
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...