×

ஆண்டிபட்டி அருகே 1330 திருக்குறள், விளக்கத்தை 1330 தபாலில் எழுதி இளைஞர் சாதனை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே 1330 திருக்குறள், அதன் விளக்கத்தை 1330 தபால் அட்டைகளில் எழுதி இளைஞர் சாதனை படைத்துள்ளார்.
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் விஜயக்குமார் (32). இவருக்கு இவாஞ்சலின் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளார். திருப்பூரில் தனியார் கம்பெனி நடத்தி வரும் விஜயக்குமார் அப்துல்கலாம் பிறந்தநாள், மாணவர்கள் தினத்தையொட்டி திருக்குறள் பற்றி விழிப்புணர்வு செய்ய முடிவு செய்தார்.

இதற்காக 1330 திருக்குறள் மற்றும் அதன் விளக்கங்களை 1330 தபால் அட்டையில் எழுதி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இதற்கான சாதனை நிகழ்ச்சி ஜெட்லி புக்ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் கடந்த 11ம தேதி திருப்பூரில் நடந்தது. இதில் விஜயகுமார் 22 மணிநேரம் 5 நிமிடம், 27 விநாடிகளில்  1330 திருக்குறள் மற்றும் அதன் விளக்கங்களை 1330 தபால் அட்டையில் எழுதியுள்ளார். இதற்கு அந்நிறுவனம் சார்பில் விஜயகுமாருக்கு உலக சாதனையாளர் விருது, கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. உலக சாதனை படைத்த விஜயகுமாரை ஆண்டிபட்டி பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், ‘அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி நான் திருக்குறள் எழுதிய 1330 தபால் அட்டைகளையும் குடியரசு தலைவர், பிரதமர், தமிழக முதல்வர், ஆளுநர், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட 1330 பேருக்கு அனுப்பவுள்ளேன். தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் விதமாக இச்சாதனை முயற்சியில் ஈடுபட்டேன்’ என்றார்.

Tags : Andipatti , Andipatti, 1330 Thirukkural, description, 1330 postage, youth record
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி