×

வாடிப்பட்டி ஜிஹெச்சில் மருந்து,மாத்திரைகள் சாப்பிட கூட தண்ணீர் இல்லை: நோயாளிகள் புலம்பல்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதியின்றி நோயாளிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாடிப்பட்டி பேருந்து நிலைய உட்புறத்தில் அமைந்துள்ளது வாடிப்பட்டி அரசு மருத்துவமனை. இது வாடிப்பட்டி தாலுகா மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பகுதிகளுக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் முக்கிய மருத்துவ சிகிச்சைக்கான ஆதாரமாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் வாடிப்பட்டி மதுரை திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளதால், அடிக்கடி விபத்தில் காயமடைந்தவர்களும் முதலுதவி சிகிச்சை பெற இம்மருத்துவமனைக்கே வந்து செல்கின்றனர்.

24 மணி நேரமும் நோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனையில் கடந்த 2016-2017ம் ஆண்டு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் குடிநீர் தேவைக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயினை பயன்படுத்தி வந்தனர். ஆனால் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் பழுதடைந்தது. அதனை மருத்துவமனை நிர்வாகமும் சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்டதால் பல மாதங்களாக அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் செயல்படாமல் நோயாளிகளும். பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் காத்திருப்பு அறையும் அலுவலர்கள் இருக்கும் போது மட்டுமே திறக்கப்படுகிறது.

மற்ற நேரங்களில் அவையும் பூட்டி கிடப்பதால் நோயாளிகளும், அவர்களுடன் வந்தவர்களும் மரத்தடியில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. போடிநாயக்கன்பட்டி மோகன்தாஸ் கூறுகையில், ‘‘வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் நிலையில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மருத்துவமனையில் உள்ளவர்களிடம் கேட்டால் தண்ணீர் எல்லாம் வரும்போதே கொண்டு வரவும், இல்லையெனில் வெளியே சென்று விலைக்கு வாங்கிக்கவும் என அலட்சியமாக பதில் கூறுகின்றனர். இரவு நேரங்களில் நோயாளிகள் வந்தால் அவசரத்திற்கு மருந்து, மாத்திரைகள் சாப்பிட கூட தண்ணீர் இல்லாமல் அந்நேரம் அவதிப்படுகிறோம். இனியாவது மருத்துவமனை நிர்வாகம் பல மாதங்களாக பழுதாகி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சரி செய்து நோயாளிகளின் அடிப்படை தேவையான குடிநீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Vadipatti GH, tablets, no water,
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...